கடல்கடந்து நானோர் கலப்புமணஞ் செய்தே இடர்களைய வந்துள்ளேன்; எல்லாரும் போற்றிஎனை ஆடுதுறை என்றே அழைப்பதையுங் கேட்டிருப்பீர்; நீடுபுகழ் கொண்டஇந்த நெல்லுக்கு நேருண்டோ? நாடோறும் வானொலியார் நத்திப் புகழ்ந்தென்னைப் பாடாத நாளுண்டா? பத்தியுடன் என்பெயரைச்30 சொல்லாத நாளுண்டா? வேளாண்மைத் தோத்திரங்கள் இல்லாத நாளுண்டா? என்னருமைத் தொண்டரவர்; செல்வ வளமிக்க சீமான் எனைப்போலப் பல்வகைய ஊர்தி படைத்தவரார் இவ்வுலகில்? பேருந்து வண்டிகளில் பெட்புடன்நான் செல்வதுண்டு, நீருண்ட மேகமென நீள்புகையைக் கக்கும் தொடர்வண்டி ஏறித் தொடர்வதுண்டு; நீரில் படர்வதெனில் நல்ல படகுண்டு கப்பலுண்டு, காட்டுவழிச் செல்வதெனில் மாட்டுவண்டி ஏறிடுவேன், மேட்டுக் குடியார்போல் வேற்றுமைகள் பாராட்டேன்;40 ஏந்திவர ஊர்திகள் நான் எத்தனையோ பெற்றிருந்தும் மாந்தர் தலைகூட வாகனமாக் கொள்வதுண்டு; நொந்திருக்கும் நோயொன்று வந்துவிடின் வான்பறந்து வந்தெனக்குச் செய்யும் மருத்துவங்கள் எத்தனையோ! நாடாள வந்ததொரு நல்வேந்தன் நானென்றால் கூடா தெனமறுத்துக் கூறிடுவார் யாருமில்லை; தஞ்சைத் தரணியிற்றான் என்றன் தனியாட்சி நஞ்சைப் புலமெல்லாம் நல்லாட்சி செய்திடுவேன்; காராளர் வந்தாடிப் பட்டமெனைச் சூட்டிடுவார் ஊராளும் நல்லமைச்சர் உண்டு துணையாக;50 நானாளும் நன்னிலத்தை நச்சாக்க நல்லவரைப் போல்நாளும் வந்துபுகின் பொங்கிக் களையெடுப்பேன்; எல்லைஎன்று முள்வேலி இட்டே எனதுநிலம் தொல்லைஒன்றுங் காணாமல் தொன்றுமுதல் காத்திருப்பேன்; பொன்னகரைச் சுற்றிப் புறமதில்கள் வேண்டுமன்றோ? முன்வளைத்த நால்வரப்பும் மொய்ம்புடைய கோட்டைகளாம்; |