பக்கம் எண் :

190கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

நெல்லுக்கே என்றிறைத்த நீரைக் கருணையினால்
புல்லுக்கும் ஆங்கே பொசியவைப்பேன்; அக்கருணை
போற்றாமல் என்னைப் புறக்கணித்து வந்தவிழல்
சேற்றோடு சேறாகச் சீரழியச் செய்துவிடப்60
போராடும் காராளர் பொன்றாக் களமறவர்
ஏராளம் ஏராளம் என்பாற் பணிபுரிவார்;
மண்ணின் வலிமைமிகும் மார்பைப் பிளந்தெறியும்
எண்ணில் உழுகலங்கள் எல்லாம் படைக்கலங்கள்;
நாட்டை வலுப்பபடுத்த நான்விரும்பி எத்தனையோ
கோட்டை புகுந்தங்குக் கொண்டதுண்டு வெற்றிபல;
ஆர்க்கும் ஒலியோ டணிவகுத்து நிற்கின்ற
போர்க்களங்கள் போய்ப்புகுந்து போர்விளைத்து வந்தவன்நான்
இத்தனையும் பெற்றுள்ள என்னை அரசனெனச்
சொற்றமொழி யாரே துணிந்து மறுத்துரைப்பார்?70
நெல்லே ருழவரெனும் நேரியரிங் கில்லைஎனில்
வில்லே ருழவரெங்கே? சொல்லே ருழவரெங்கே?
இவ்வண்ணம் என்பெருமை எவ்வளவோ ஈங்குளவாம்;
அவ்வளவும் சொல்லில் அடங்கிடுமோ? என்றாலும்
ஏனோ பதரென்றே என்குலத்தைத் தூற்றுகின்றார்?
நானோஇம் மாந்தர் நகைப்பிற் கிடமானேன்?
மக்களிலே மிக்கபதர் வாழ்வதனைக் கண்டிருந்தும்
தொக்கஅவர் கூட்டத்தைத் தூற்றா திருக்கின்றார்;
வைக்கோலாய் மற்றும் உமிதவிடாய் வந்தாலும்
எக்காலும் அவ்வடிவில் என்னால் உதவியுண்டு;80
மக்கள் பதரானால் மாநிலத்தில் யாருக்கும்
தக்க உதவி தருவாரோ? தந்ததிலை;
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோர் என்றென்னைப்
பண்டொருவர் நன்முறையிற் பாராட்டிச் சொன்னாலும்
நெஞ்சந் துணிந்தொருவர் நெல்லுமுயிர் அன்றென்று
வெஞ்சொல் மொழிந்தென்றன் விஞ்சு புகழ்குறைத்தார்;
செல்வமென என்னைத்தான் செப்பிடுவார் முன்பெல்லாம்
வல்வினையர் செல்வமென மற்றவற்றை இன்றுரைப்பர்;