காராளர் ஓட்டுங் கலப்பை வகுத்தவழி நீராலே வாழ்ந்து நிலத்தில் இடுந்தழையால்90 நாளும் உரம்பெற்று நன்கு செழித்தோங்கி நீளும் பயிராய் நிமிர்ந்தெழிலாய் நின்றிருப்பேன் பால்பற்றிச் சூல்முற்றிப் பையத் தலைகுனிவேன்; நூல்கற்ற பாவாணர் நுண்ணியதங் கற்பனையால் பற்பலவாக் கட்டுரைத்துப் பாடி மகிழ்ந்தார்கள்; எற்குற்ற ஓர்கவலை யாரே அறிவார்கள்? முற்ற முதிர்ந்தோமே முன்னே விதைத்தவர்கள் உற்றரி வாளுடனே ஒடி வருவாரே வாளோடு வந்தவர்கள் தாளோ டரிவாரே தாளாதுல கட்டித் தயங்கா தடிப்பாரே100 மாடேற்றி என்தலையை வந்து மிதித்திடுவார் சூடேற்றி வேகவைத்துத் தொல்லை தருவார் இடிப்பார் அரைப்பார்என் தோலை உரிப்பார் கடிப்பார் உலையில் கருணையின்றி வேகவைப்பார் மாவாக மாற்றி மனம்போன போக்கினிலே நாவால் சுவைத்திடவே நாலுவகைப் பண்டங்கள் செய்வாரே என்றுளத்தில் சிந்தித்த காரணத்தால் வெய்தே உயிர்த்துமனம் வெம்பித் தலைசாய்த்தேன்; என்னை உருவாக்க எத்தனையோ பாடுபட்ட பொன்னன் குடிலுக்குட் போகவிட எண்ணாமல்110 மன்னன் எனவாழ்வோன் மாமனைக்குக் கொண்டுசென் றென்னைக் களஞ்சியத்தில் இட்டு நிறைப்பாரே போட்டு மறைப்பாரே பொல்லாங்குக் காரரென நாட்டு நடப்புணர்ந்து நான்தலையைத் தொங்கவிட்டேன்; மெய்யாகக் கற்றவர்க்கு மேலாம் உவமைசொலிப் பொய்வாய்ப் புலவர்மனம் போனபடி பாடிவிட்டார்; எத்தனைதான் என்னை இடர்ப்படுத்தி நின்றாலும் பித்துலகங் கொண்ட பெரும்பசியைப் போக்குதற்கே ஏற்றுள்ளேன் இம்மேனி; என்றும் பொதுநலமே போற்றிடுவேன் துன்பம் பொறுத்திடுவேன் ஈதுறுதி;120 |