196 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
இரங்காமல் நிற்கின்ற குணமும் உண்டாம். ஈடில்லாச் செல்வவளம் பெற்றி ருந்தும் உறங்காமல் காத்திருக்குங் கஞ்சன் போல ஒருகனியும் உதவாத எட்டி யுண்டு.10 தோன்றிவரும் நாள்தொட்டு மடியுங் காறும் துணைசெய்யும்; மடிந்தபினும் பயனேநல்கும்; ஊன்றிவளர் வேர்முதலாத் தன்பா லுள்ள உறுப்பெல்லாங் கொடுத்துதவும்; உயிரும் ஈயும்; மான்திரியுங் காட்டகத்தும் மாந்தர் வாழும் நாட்டகத்தும் மதில்சூழும் வீட்ட கத்தும் வான்தடவித் தலைவிரித்து நிமிர்ந்து நிற்கும்; வாழ்வெல்லாம் பிறருக்கே ஆக்கி நிற்கும்.11 பேசுமொழி கண்டறியா முன்னர் மாந்தர் பெருங்கிளையிற் பரணமைத்து வாழ்ந்த துண்டு; வீசுபுயல் வேகத்துப் புரவி யோடு வினைமிக்க தேர்ப்படையும் வேந்தன் றானும் காசுபண மில்லாமல் தங்கு தற்குக் காற்றுநிழல் அத்தனையும் தந்தி ருக்கும்; மூசுபுகழ் மூவேந்தர் தலையிற் சூடும் மும்மலரும் தந்ததெது? மரமே யன்றோ?12 கொஞ்சுமொழிச் செல்வத்தைத், தன்னை ஏற்றுக் கொண்டவளைப் பஞ்சணையில் தனிக்க விட்டு, மஞ்சுதவழ் வான்மாடங் கொண்டி லங்கும் மாமனையை நீத்தகன்று, செல்வ வாழ்வோ *தஞ்சமெனத் துறந்தோடி, நாட்டு மக்கள் தவிப்பகற்றத் துயர்துடைக்க வழியைத் தேடி, அஞ்சுபொறி காத்தவனாம் புத்தன் வந்தான் அரசமரத் தடியில்தான் ஞானம் பெற்றான்.13 |