பக்கம் எண் :

தமிழ் முழக்கம்197

உள்ளத்தை உருகவைக்கும் வாச கத்தை
    உலகுக்குச் சொன்னமணி வாச கர்க்கு
வெள்ளத்துச் சடைமுடியன் ஞானம் ஓதி
    விளக்கியதும் குருந்தமரத் தடியில் என்பர்;
கள்ளத்தைப் பாவத்தை நீக்கும் என்றே
    கைதொழுது வணங்கவரும் ஏசு தன்னை
அள்ளிக்கொண் டிலங்குகின்ற சிலுவை தானும்
    அம்மரத்தின் உறுப்பளித்த சலுகை யன்றோ?14

சொல்லாலும் எண்ணாலும் அளக்கவொண்ணாச்
    சோதியனாம் பரமனவன், கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வர்க்கும் மறைகள் காணா
    வாக்கிறந்த நிறைபொருளாய், உலகில் உள்ள
எல்லாமாய், அல்லதுமாய் இருந்த பாங்கை
    இருந்தபடி அப்படியே இருந்து காட்டிக்
கல்லாலின் புடையமர்ந்தே சொன்னான் என்பர்;
    கடவுட்கும் மரத்தருமை தெரிந்த தன்றே.15

தேசியக்கல்லூரி

திருச்சிராப்பள்ளி

28.2.1970.


*தஞ்சம் - எளியது (அற்பமானது)