பக்கம் எண் :

198கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

14. கம்ப நாட்டில்...

எண்சீர் விருத்தம்

கம்பனைஓர் ‘சக்ரவர்த்தி’ என்று சொன்னார்
    கனன்றெழுந்தேன் முடியரசன் ஆன தாலே;
வெம்பியெழுந் தார்ப்பரித்தேன்; தோள்கள் தட்டி
    வீரரெலாம் வருகவெனக் கூவி நின்றேன்;
தெம்புடைய என்மறவர் போர்வி ருப்பால்
    தினவெடுத்த திண்டோளர் திரண்டு வந்தார்;
நம்பியவர் துணையாக என்றன் வீரம்
    நாட்டுதற்குப் படையெடுத்தேன் கம்பன் நாட்டில்.1

கனன்றெழுந்து படையெடுத்த என்முன் கோட்டைக்
    கதவடைக்க வில்லை அதைத் திறந்தே வைத்தான்;
முனைந்தெழுந்து காவல்செயும் வீரர் இல்லை;
    முற்றுகையைத் தடுக்கின்ற படையு மில்லை;
சினந்தெழுந்த என்னுடன்போர் செய்ய அஞ்சிச்
    செயலற்று நின்றனனோ கம்பன் என்று
நினைந்தெனது படைதொடர உட்பு குந்தேன்
    நிறைந்தொளிரும் அமைதியையே அங்குக் கண்டேன். 2

உருவியவாள் உறையகத்தே உறங்க வைத்தேன்;
    உளத்தடத்தில் பொங்கிவரும் உணர்ச்சி ஒன்று
மருவியதால் இனமறியா மகிழ்ச்சி கொண்டு
    மன்னனவன் அரசிருக்கும் மன்றஞ் சென்றேன்;
பெருகியதோர் அறிவொளியைத் தேக்கி வைத்த
    பெருவிழியன் விரிநுதலன் என்னை நோக்கி,
‘அருகினில்வா என்மகனே’ என்று கூறி,
    அகங்குளிர இருகையும் நீட்டி நின்றான்.3