அரவணைக்க நீட்டியகை யதனுள் ஏதோ அடங்கியுள தெனநினைந்து கூர்ந்து நோக்க, அறம்வளர்க்கும் குறளேடும், புலம்வ ளர்க்கும் அழகியதொல் காப்பியமாம் ஏடும் கண்டேன்; பொரநினைந்த என்மனத்தை நொந்து கொண்டேன்; பொன்னிவள நாட்டான்முன் மண்டி யிட்டு, நறவுகுக்கும் மலர்ப்பொழில்சூழ் நினது நாட்டை நான்கண்டு மகிழவந்தேன் என்று ரைத்தேன்.4 என்றுமுள தென்றமிழைப் பாடிப் பாடி இயல்தவழ்ந்து விளையாடும் நாவின் வேந்தன், நின்றஎனை நகைதவழ இனிது நோக்கி ‘நேரியனே என்னுடன்வா எனது நாட்டில் துன்றுமெழிற் சிறப்பெல்லாம் காட்டு கின்றேன்; தோழமையால் அதுகண்டு மீண்ட பின்னர் நின்றனுயர் நாட்டினையும் அதுபோல் ஆக்க நினைந்தெழுக’ என்றுரைத்தான்; அவன்பின் சென்றேன். 5 செந்தமிழின் பாட்டரசன் கம்ப நாடன் செங்கோன்மை செலுத்திவரும் நாட்டில் வாழ்வோர் சிந்தைகொளும் மகிழ்ச்சியினால் சிரித்துப் பேசிச் சிந்துகிற கண்ணீரே அங்குக் கண்டேன்; வெந்துழல்வோர் திரண்டெழுந்து நீதி கேட்க வெகுண்டரசு தாக்கியதால் அவர்தம் மெய்கள் சிந்துகிற குருதியிலே தோய்த்தெ டுத்துச் செங்கோலாக் காட்டுகிற கோன்மை காணேன்.6 வயலொன்றைக் காத்துவரும் உழவன் போல வையமெலாம் காக்கின்ற கோன்மை கண்டேன்; உயிரொன்றி வாழ்கின்ற உடம்பாய் நின்றே உயிரனைத்துங் காக்கின்ற கோன்மை கண்டேன்; |