200 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
செயிரின்றி இயல்பினிலே ஒருமைப் பாடு செழித்துயரச் செய்கின்ற கோன்மை கண்டேன்; கயலொன்றும் விழிமடவார் கற்பைக் காக்கும் கருத்தேபோல் நிலங்காக்குங் கோன்மை கண்டேன்.7 கலைதெரியும் மண்டபங்கள் அங்குக் கண்டேன் கல்லெறியும் மண்டபங்கள் அங்கே இல்லை; விலையறியாக் கல்விதனை விரும்பிக் கற்று வீறுபெறும் மாணாக்கர் குழுவைக் கண்டேன்; நிலையறிய மாட்டாமல் மயங்கி, வேலை நிறுத்தங்கள் செய்வோரைக் கண்டே னல்லேன்; அலைதவழும் கடலொலிபோல் ஆர்ப்பா ரில்லை அமைதியுடன் சுவடிகளே பார்ப்பா ருண்டு.8 காசுபணம் தந்துகலைப் பட்டம் வாங்கும் காளையரை அந்நாட்டில் எங்குங் காணேன்; ஆசிரியச் செய்கின்ற கடமை பூண்டும் அன்பளிப்புத் தொகையாகப் பொருள்கள் பெற்று, மாசுபடத் தேர்வெழுதி வந்த பேர்க்கும் மதிப்பெண்கள் வழங்குகிற கயமை இல்லை; ஆசிரியர் மாணவர்க்குள் பகையும் இல்லை அப்பன்மகன் எனமதிக்கும் உறவே கண்டேன்.9 பயிலவரும் மாணவர்கள் தெளிந்து தேரப் பயிற்றுமொழி எந்தமொழி என்று கேட்கும் *மயலறிவும் சொற்போரும் அங்கே இல்லை; மதியுடையார் செந்தமிழே மொழியக் கேட்டேன்; வயிறுவளர்ப் பொன்றனையே குறியாக் கொண்டு வழங்குகிற கல்வியினை அங்குக் காணேன்; உயரறிவு வளர்ச்சிக்கே உதவுங் கல்வி உணர்த்துகிற மேன்மைதனை அங்குக் கண்டேன்.10
*மயலறிவு - மயக்கத்தை உடைய அறிவு |