கந்தனுக்கே நிகராய இளைஞர் எல்லாம் கலைபலவுந் தெரிகின்ற கழகங் கண்டேன்; சந்தனத்து *நகில்மடவார் சதங்கை கட்டிச் சதிதவறா தாடிவரும் அரங்கங் கண்டேன்; பந்தடித்துப் பயில்கலையும் மற்று முள்ள பன்னரிய நுண்கலையும் தேர்ந்து வல்லோர் வந்திருக்கும் இடம்பலவுங் கண்டு கண்டு வளர்கலைகள் மிகுநாட்டை வாழ்த்தி நின்றேன்.11 குழலிசையும் யாழிசையும் எழுப்பும் ஓசை குயிலிசையை வண்டிசையை விஞ்சி நிற்கும்; முழவுவகைத் தோற்கருவி தனித்தும் சேர்ந்தும் முழங்குகிற பேரொலிகள் இடியை விஞ்சும்; பழகுமவர் மிடற்றெழுந்த பாடல் தந்த பண்ணெல்லாம் தெளிதேனை விஞ்சி நிற்கும்; அழகொழுகும் இடைமடவார் அரங்கம் ஏறி ஆடுகின்ற எழில்கண்டு மயில்கள் சோரும்.12 கலையுடுத்துக் குழலிசைக்கத் தாளங் காத்துக் கைவழியே விழிசெலுத்தும் நடனங் கண்டேன்; கலைவிடுத்துக் குழல்விரித்து மானம் விட்டுக் காசொன்றே குறியென்று பிறந்த மேனி நிலைபடைத்துச் சூடுண்ட மண்பு ழுப்போல் நெளிந்துகுதித் தாடுகின்ற பேய்கள் இல்லை; நிலைகெடுத்த கலைகெடுத்த பரணிப் பேய்கள் நெளிவினுக்குக் கலையின்பேர் சூட்ட வில்லை.13 பண்ணுடனே திறமனைத்தும் உணர்ந்த வல்லோர் பாட்டரங்கில் தமிழிசையே முழங்கக் கேட்டேன்; *கண்ணறவக் களிப்பினிலும் பாணர் தம்வாய் கன்னிமொழித் தமிழிசையே பாடக் கேட்டேன்;
*நகில் - கொங்கை *கண்ணறவம் - கள்நறவம் |