பக்கம் எண் :

தமிழ் முழக்கம்203

ஏற்றுமதிப் பொருள்களெலாம் மலைபோற் கண்டேன்
    இறக்குமதிப் பொருள்களெலாம் சிலவே கண்டேன்;
காற்றுவழிக் கலஞ்செலுத்தும் வணிகங் கண்டேன்
    கணக்கின்றிப் பொருள்குவிக்குந் திறமுங் கண்டேன்;
போற்றுமதிக் கணக்கரெலாம் எழுதும் ஏட்டில்
    பொய்யான கணக்கிரண்டு காண வில்லை;
தூற்றுகின்ற பழியொன்றும் பெற்றா ரல்லர்
    துலவுக்கோல் போல்வணிகம் செய்வ தாலே.18

சாதியெனும் தொழுநோயை அறியா மக்கள்
    சமுதாயப் பண்புடனே ஒழுகக் கண்டேன்;
ஓதிவருங் கல்வியினால், உற்ற செல்வ
    உயர்ச்சியினால், பிறநலத்தால் மிளிரக் கண்டேன்;
பாதிமதி நுதல்மடவார் பிள்ளை கட்குப்
    பாலூட்டித் தமைக்கொண்ட கணவற் பேணிக்
கோதில்மனை நலங்காத்து விருந்தும் ஓம்பிக்
    குடும்பத்தின் விளக்காக விளங்கக் கண்டேன்.19

சமையங்கள் பலவெனினும் உயர்வு தாழ்வுச்
    சண்டையின்றிச் செம்பொருள்தான் ஒன்றே என்று
அமைதியுடன் அப்பொருளை அகத்தி றுத்தி
    அன்புவழி ஒழுகிவரும் நிலையைக் கண்டேன்;
இமையந்தன் நிலைகெடினும் ஆணும் பெண்ணும்
    இமையளவும் வழுவாத ஒழுக்கங் கண்டேன்;
எமதவ்வை உரைக்கிணங்க மக்கள் நல்லர்
    என்பதனால் உயர்ந்தோங்கும் நாடு கண்டேன்.20

கம்பன் திருநாள்

காரைக்குடி

21.3.1970