ஊரறிய நாடறிய வாழ்வு பெற்றோர் ஒருநூற்றின் மேலாக விளங்கு கின்றார்; கூரறிவுப் பாவேந்தன் எனையும் ஈங்குக் கொடையாக வழங்கியுளான் நாட்டுக் காக.3 துறைதோறும் துறைதோறும் தீங்கு செய்து தூயதமிழ்ப் பண்பாட்டை மாற்றி விட்டு, மறைவாக நமக்குள்ளே பிளவுண் டாக்கி வஞ்சனையால் சூழ்ச்சியினால் வாழ்வு பெற்ற கறைசேரும் ஆரியமாம் காரி ருட்டைக் கடிதினிலே வெருண்டோடச் செய்து, மீண்டும் நிறைவான தமிழ்வாழ்வு மிளிர வேண்டி நீள்துயிலை நீக்கஎழும் கதிரோன் போல்வான்.4 வஞ்சத்தை ஒருசிறிதும் அறிய மாட்டான் மற்றவர்தம் உயர்வுக்குப் புழுங்க மாட்டான்; நெஞ்சத்தைத் தமிழ்மொழிக்கே தந்த தாலே நினைக்கின்ற தன்கருத்தை மறைக்க மாட்டான்; அஞ்சித்தன் னுளக்கருத்தைக் குறைக்க மாட்டான்; அதுவருமே இதுவருமே எனந டுங்கிக் கெஞ்சித்தன் பெருமிதத்தைச் சிதைக்க மாட்டான் கிளர்ந்துவரும் அரியேற்றின் தோற்றங் கொண்டான். 5 எவர்வரினும் நம்புகின்ற தூய வுள்ளம் இழிபொய்ம்மை சூதறியாக் குழந்தை யுள்ளம் தவறெதுவும் தமிழ்மொழிக்குச் செய்வார் இங்கே தலையெடுத்தால் சீறியெழும் புலிப்போத் துள்ளம் சுவர்வைத்துத் தடுத்துநமைப் பிரித்து வைக்கும் சூழ்ச்சிகளைச் சுட்டெரிக்கும் புரட்சி யுள்ளம் கவிதையெனும் அமுதமழை பொழியு முள்ளம் கருவடிவம் உறும்போதே கவிஞன் ஆனோன்.6 |