16. பாவேந்தர் வழங்கிய கொடை எண்சீர் விருத்தம் பூவேந்தர் வழங்குகொடை, காலப் போக்கிற் போய்மறையும் நிலைமைத்தாம்; பெருமை சான்ற நாவேந்தர் வழங்குகொடை கால மெல்லாம் நலம்பயந்து நிலைத்திருக்கும்; பாண்டி தந்த பாவேந்தன் வழங்குகொடை கவிக்கு லத்துப் பரம்பரையாய்த் தலைமுறைகள் தோறும் நிற்கும்; சாவேந்திப் போனபினும் தழைத்து நிற்கும் தகைமைத்தாம் அக்கவிஞன் தந்த செல்வம்.1 பாவேந்தன் வழங்குகொடைப் பெருமை எல்லாம் பகுத்தெடுத்து வகைப்படுத்திச் சிறப்பை எல்லாம் நாவேந்திப் பாடுதற்கு யாரால் ஒல்லும்? நாளொன்று போதுவதோ? பலநாள் வேண்டும்; கோவேந்தர் போலஎழில் தோற்றங் கொண்டோன் கொடைசொல்லக் காவியங்கள் பலவும் வேண்டும்; பூவேந்தும் நறவமென இனிக்கும் செஞ்சொற் புரட்சிப்பாக் கொடைஞனவன் கொற்றம் வாழ்க.2 குருட்டுலகில் இருட்டறையில் வாழ்வோர்க் கெல்லாம் குடும்பவிளக் கேற்றியறி வொளியைத் தந்தான்; திருட்டுமனப் போக்கர்தமைச் செருக்க டக்கித் தீந்தமிழை வளர்ப்பதற்கு வழியைச் சொல்லித் |