பக்கம் எண் :

தமிழ் முழக்கம்209

    பற்றியநாம் பேடியர்போல் நடுங்கு கின்றோம்;
உடையுண்டு போனதலால் நமது வீரம்
    ஒளியுண்டு நின்றதென உரைக்கப் போமோ?7

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
    ஒப்பப்பர் ஆகிவரும் நாளை யிங்கு
நாடப்பா! ஏழைமுத லாளி என்ற
    நாடகத்தைக் கலைத்தொழிக்க நாளும் எண்ணிப்
பாடப்பா உலகப்பா உன்றன் பாட்டை!
    பார்மகிழப் போடப்பா *புதிய பாட்டை!
கேடப்பா மேல்கீழ்கள் என்று சொன்னான்
    கேட்டிருந்தும் ஊமையப்பர் ஆகி நின்றோம்.8

புதியதோர் உலகமினிப் படைப்போம் வாரீர்
    பொசுங்கட்டும் கெடுதிதரும் பழைமை எல்லாம்;
மதியதனை ஒளிசெய்வோம்; உயர்வு கொள்வோம்;
    மதம்சாதிக் கொடுமைகளை விட்டொ ழிப்போம்;
விதியதனை நம்பிமனம் சோர்ந்து நின்று
    வீணாகிப் போகாமல், பொதுமை காணும்
விதியதனைச் செய்திடுவோம் என்றான்; நாமோ
    விழிதிறக்க மனமின்றி உறங்கு கின்றோம்.9

தெற்கோதும் தேவாரம் ஆழ்வார் தந்த
    திருவாய்நன் மொழியான தேனி ருக்கக்
கற்கோவில் உட்புறத்தே புரியாப் பாடை
    கால்வைத்த தெவ்வாறு? நெஞ்சு ருக்கும்
சொற்கோவின் நற்போற்றி அகவல் எங்கே?
    தூயவர்தம் திருமொழிகள் இறைவன் காதில்
நிற்காது போய்விடுமோ? என்று கேட்டான்;
    நிற்கின்றோம் சிலையாக நாமும் சேர்ந்து.10


*புதியபாட்டை - புதுப்பாதை