பக்கம் எண் :

210கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

தமிழ்நாட்டுப் பாடகரே தமிழைப் பாடித்
    தமிழ்மானம் காத்திடுவீர் என்று சொன்னான்;
அமிழ்தூட்டும் தாய்மொழியைப் பாடா ராகி
    அவர்மானம் தமிழ்மானம் அனைத்தும் விட்டார்;
தமிழ்வேட்டுப் பாடுதற்கு முனைந்த பேரைத்
    தமிழ்ப்பகைவர் படுகுழியில் அழுத்து கின்றார்;
தமிழ்நாட்டு மாந்தரெனும் நாமும் சேர்ந்து
    ததிங்கிணத்தோம் போடுகின்றோம் மானம் கெட்டு.11

வேறு

உன்னை வளர்ப்பன உணவே - உயிரை
    உணர்வை வளர்ப்பது தமிழே
என்ன வழங்கினன் பாடல் - எனினும்
    எதனை வளர்த்தனம் இங்கே?
தென்னை வளர்ந்தது போலே - இந்தத்
    தேகம் வளர்ந்தது மேலே
கன்னல் நிகர்த்திடும் தமிழை - நெஞ்சில்
    கட்டி வளர்த்ததும் உண்டோ?12

கொடியோர்செயல் அறவே ஒரு
    கொலைவாளினை எடடா!
இடியேறெனப் புலியேறென
    எழுவாய்கணை தொடடா
படிவாழவும் தமிழ்வாழவும்
    பகைமாயவும் கொடுவாள்*
பிடிவாவெனத் தருவான்எனின்
    பெறவேயிலை அதையே.13

தலையாகிய அறமேபுரி
    சமவாழ்வினைப் பெறவே
இலையோ உரம்? மலையோபகை?
    எழுவாய்தமிழ் மகனே!


*கொடுவாள் - வளைந்தவாள்<