212 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
17. பாரதி பொழிந்த மழை எண்சீர் விருத்தம் ‘காலதனால் உனைமிதிப்பேன் காலா வாடா’ கவியிதனில் இடிமுழக்கம் ஒலிக்கக் கேட்டேன்; நூலமரும் நெஞ்சத்தில், நுவலும் வாக்கில் நுடங்காத உண்மையொளி மின்னக் கண்டேன்; கோலமிகு வெள்ளத்தின் பெருக்கைப் போலக் கொடுத்தகவிப் பெருக்கத்தில், உணர்ச்சிப் பாங்கில் ஞாலமிசைத் தெள்ளுதமிழ் மழையைக் கண்டேன் நான்நனைந்து நனைந்தெழுந்து பாடு கின்றேன்.1 வள்ளுவனும் இளங்கோவும் மற்று முள்ளோர் வகுத்தமைத்த நூற்கடலுள் தவழ்ந்த மேகம், உள்ளெழுந்த உணர்ச்சிஎனும் பெருங்காற் றுந்த உயர்ந்தெழுந்து கற்பனைவான் திரிந்த மேகம், துள்ளிவருஞ் சொற்களெனும் இடிமு ழக்கித் தூயதமிழ்ப் பார்வையினால் மின்னும் மேகம், கள்ளுமிழும் கவிப்பயிர்கள் செழிக்க வேண்டிக் கருக்கொண்டு தமிழ்மழையைப் பொழிந்த மேகம்.2 அடிமைஎனுங் கொடுவெயிலின் வெம்மை தாக்க அகம்வறண்டு, செயல்திரிந்து, பொருள்நீர் வற்றி, மிடிமைஎனும் வெடிப்புற்றுத், தொடர்ந்து வந்த மேலான உரங்கெட்டுத் தொழில்கள் என்னும் |