செடிகொடிகள் அடிவதங்கி, உரிமை என்னும் செழும்பயிர்கள் மிகவாடி, மயங்குங் காலை இடியுடைய கோடைமழை போல வந்தான் இந்நாடு செழித்துயரப் பொழிந்து நின்றான்.3 தலைவரெனும் உழவரெலாம் சொல்லேர் கொண்டு தாய்நாட்டார் மனப்புலத்தைப் பண்ப டுத்தி, நிலையுடைய உரிமையுணர் வென்னும் வித்தை நிலமெல்லாந் தூவிவிட்டார்; அந்தப் போழ்து கலையுணரும் பாரதியாம் மேகந் தோன்றிக் கவிமழையை நிலங்குளிரப் பொழியக் கண்டோம்; விலைமதியா விடுதலையாம் பயிர்செ ழித்து விளைபயனும் நனிநல்கி வளரக் கண்டோம்.4 சேர்த்தெடுத்த சொல்விளங்குங் கவிதை வானில் திரிந்துவரும் பாரதியாம் எழில்சேர் கொண்டல் கார்த்தொடுப்பால் இடியிடித்துப் பொழிதல் போலக் கவித்தொடுப்பால் உணர்ச்சியினை முழக்கி, மின்னி, ஆர்த்தடித்த தமிழ்மழையால் திரண்ட வெள்ளம் ஆங்கிலத்தார் அடித்துவைத்த கூடா ரத்தைப் பேர்த்தெடுத்துத் தள்ளியதை அறியா ருண்டோ? பெருமழையின் ஆற்றலினைத் தெரியா ருண்டோ?5 கள்ளெடுத்துத் தீயெடுத்துச் சேர்த்து நல்ல காற்றெடுத்து வான்வெளியும் கலந்து வைத்துத் தெள்ளுதமிழ்ப் பெரும்புலவன் கவிதை யாக்கித் தீந்திமிதீம் எனமுழங்கிப் பெய்தான்; நீரின் அள்ளுசுவைப் பெருமைஎலாம் சுருங்கக் கூறின் அகங்கவரு மெண்சுவையும் பொருந்தி நிற்கும்; துள்ளிவரும் உணர்ச்சியினால் வேகங் காட்டுந் தொடர்மழையில் நனைந்தவர்க்கு வீரந் தோன்றும்.6 |