பக்கம் எண் :

220கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

காந்தம் எனஈர்க்கும் காந்தி எனும் பெயரை
ஏந்தும் சுடர்க்கதிரோன் இங்கெழுந்து வந்தனன்காண்;50
தன்வாழ்வு நாடாமல் தான்பிறந்த தாயகத்தின்
பொன்வாழ்வு காண்பதற்குப் புண்வாழ்வை ஏற்றவனை,
தன்னையே நாட்டுக்குத் தந்துவிட்ட நல்லவனை,
இன்னல்கள் அத்தனையும் ஏற்று நடந்தவனை,
நோற்றுப் பிறந்தவனை நூறாண்டு சென்றபினும்
ஏற்றிப் புகழ்கின்றோம்; எஞ்ஞான்றும் போற்றிடுவோம்;
பூத்த மலர்முகமும் பொக்கைவாய்ப் புன்சிரிப்பும்
பார்த்துக் கலங்கிவிட்டார் பாராண்ட வெள்ளையர்கள்;
ஆடை குறைந்தாலும் ஆண்மை குறையாத
மேடை முழக்கத்தால் மேல்நாட்டார் அஞ்சிவிட்டார்;60
தீங்கிழைத்துப் பார்த்தாலும் தீரன் கலங்காமல்
ஓங்கி வளருவதால் ஓலமிட்டார் ஆளவந்தார்;
‘நாட்டுணர்ச்சி ஊட்டுகிறார்; நாட்டார் உரிமையினைக்
கேட்டெழுச்சி கொண்டு கிளர்ச்சிகளும் செய்கின்றார்;
கொத்தடிமை செய்கின்ற கூட்டம் கிளர்ந்தெழவே
வித்திட்டார்’ என்றுரைத்து வெள்ளையர்கள் அண்ணலைக்
கூட்டுச் சிறைக்குள்ளே கூசா தடைத்துவைத்துப்
பூட்டிக் களித்தார்கள்; புண்ணியனோ அஞ்சவில்லை
சிந்தனையை மாய்க்கச் சிறைக்கூடம் வல்லதென
எந்தவர லாறும் எடுத்துரைக்கக் கேட்டதிலை;70
வெட்டவெட்டப் பூச்செடிகள் மீண்டும் செழித்துவரும்;
கொட்டிலுக்குள் வைத்த கொடிசெடிகள் சாளரத்துக்
கம்பிவழி புக்குக் கதிரோனை நோக்கிவரும்;
அம்புவியிற் காணும் அதுவே இயற்கைவிதி;
நாட்டினை உய்விக்க நாடி எழும்வீரர்
கேட்டினைக் கண்டஞ்சார்; கேடெல்லாம் பூமாலை;
பூட்டுஞ் சிறைச்சாலை பூஞ்சோலை யாகிவிடும்;