தீட்டுங் கொலைக்கருவி தேன்மலரா மாறிவிடும்; நச்சருந்தச் சொன்னாலும் செக்கிழுக்கச் சொன்னாலும் அச்சம் அவர்க்கில்லை ஆண்மையுடன் முன்னிற்பர்;80 கொள்கை உடையானைக் கொண்ட குறிக்கோளில் உள்ளம் உடையானை ஊராள்வோர் தண்டனைகள் வாட்டிவிடும், கொள்கைகளை மாற்றிவிடும் என்றிருந்தால் கோட்டைவிடுங் காட்சியைத்தான் கொண்டுவரும் கண்முன்னே; அண்ணலிவர் பட்டதுயர் ஆள்வோரால் பட்டஅடி எண்ணில் அடங்காது - எனினுமவர் வெற்றிகண்டார்; பாருலகம் எங்கணுமே பாராத வெற்றியிது! ஓருருவம் உண்மை உழைப்பால் பெறும்வெற்றி! கொள்ளையிட வில்லை கொலைப்புரட்சி செய்யவில்லை வெள்ளமெனச் செங்குருதி வீணாகச் சிந்தவில்லை90 அன்புப் புரட்சி அகிம்சைப் புரட்சியினால் இன்பத் திருநாட்டில் ஏற்பட்ட வெற்றியிது! வெற்றித் திருமகனை, வேண்டும் விடுதலையைப் பெற்றுக் கொடுத்தவனைப் பேணி வணங்கிடுவோம்; அன்றொருநாள் மாந்தர் அறிவை இழந்துவிட்டுக் கொன்றுதிரி காட்டுக் கொடுவிலங்காய் மாறிவிட்டார்; கொள்ளை யடித்தார், கொலைகள் மிகச்செய்தார்; அள்ளியள்ளி உண்டார் அரிவையர்தம் கற்பைஎலாம்; பிள்ளையென்று பாரார் பெரியரென்றுந் தாம்நோக்கார் வெள்ளைமனப் பெண்டிரென எள்ளளவும் எண்ணாராய்100 மாமதங் கொண்டு மதவெறியால் மக்களெனும் நாமமது கெட்டுவிட நாட்டு விலங்கானார்; செத்து மடிந்தவர்தம் செந்நீரும், பெண்கற்பைக் கொத்துங் கழுகாலே கொட்டுகிற கண்ணீரும் ஆறாய்ப் பெருக அழுகுரலே மீதூரத் தீராப் பழியொன்றே தேடும் நவகாளி; கொண்ட மதத்தால் கொடுவிலங்கா மாறியதால் பெண்டிர் கதறியழப் பேயாட்டம் ஆடுபவர் |