பக்கம் எண் :

222கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

செய்தீமை அண்ணல் செவிபுகுதக் கண்கலங்கி
வெய்துயிர்த்து, ஆங்கே விரைந்து புறப்பட்டார்;110
கண்டோர் தடுத்தார்நம் காந்திக்குத் தீங்கெதுவும்
உண்டாகும் என்றே உளந்துடித்து நின்றார்கள்;
அண்ணல் தயங்கவில்லை அன்றே புறப்பட்டார்;
‘பண்ணுங் கொடுஞ்செயலைப் பார்த்தும் பொறுத்திடவோ
என்நாட்டார் கையால் இறப்பு வருமானால்
முன்கூட்டிச் சென்று முடிந்து மகிழ்ந்திடுவேன்’
என்றுரைத்துக் கால்நோக எங்கும் நடந்தேகி
நன்றுரைத்தார்; அவ்வூரில் நல்லமைதி கண்டுவந்தார்;
தீண்டாமை என்னுமொரு தீய பழக்கத்தை
வேண்டா மெனத்தொடுத்த வீரப்போர் பற்பலவாம்;120
ஆண்டவன் முன்னிலையில் அன்பர்கள் சென்றருளை
வேண்ட நினைப்பவர்க்கு வேண்டாம் தடைஎதுவும்
என்றே அறப்போரை ஏற்று நடத்தியதால்
அன்றே கதவடைத்த ஆலயங்கள் தாம்திறந்த;
நல்லொழுக்கம் காத்து நடந்து நமைக்காத்த
வள்ளலுக்கு நெஞ்சால் வணக்கஞ் செலுத்திடுவோம்;
உண்மைக் கடவுளென ஓதி ஒழுகிவந்த
அண்ணல் திருவடிக்கே அஞ்சலிகள் செய்திடுவோம்;
நம்மையே உய்விக்க நாளும் உழைத்துவந்த
பெம்மான் திருமார்பில் பேதை மனத்தேம்நாம்130
தந்த பரிசிலென்ன? தந்தை மனம்மகிழ
வந்த பரிசிலென்ன? வாயில்லை சொல்லுதற்கு;
ஊரெல்லாம் நாடெல்லாம் ஓவென் றலறிடவும்
பாரெல்லாம், ஏங்கிடவும் பாவம் புரிந்துவிட்டோம்;
வாய்மை வழிநடந்தார், வாழும் நெறிநடந்தார்,
தீமை தருகின்ற தீண்டாமை வேண்டாவென்
றெண்ணி அதன்வண்ணம் எந்நாளும் தாம்நடந்தார்,