பக்கம் எண் :

தமிழ் முழக்கம்223

நண்ணார் தமக்கும் நலமே செயநடந்தார்,
இன்னா தனசெய்யா தென்றும் நடந்துவந்தார்,
ஒன்னார் மனமும் உருகும் படிநடந்தார்,140
அஞ்சாமை என்னும் அரிய வழிநடந்தார்,
எஞ்சா விடுதலைக்கே எப்பொழு தும்நடந்தார்;
அண்ணல் நடந்த அடிச்சுவட்டில் நாம்நடக்க
எண்ணி முனைந்தோமோ? எங்கோ நடந்துவிட்டோம்;
நாட்டை மறந்தோம் நமையே நாம்நினைந்தோம்;
கேட்டைப் பெருக்கினோம் கீழ்மைச் செயல்புரிந்தோம்;
நாட்டை வளமாக்கும் நல்ல தொழிலாளர்
பாட்டை மதித்தோமா? பாட்டாளி வாழ்வுயர
ஏட்டில் எழுதிவிட்டோம் எள்ளளவும் ஏற்றமில்லை;
வாட்டி வதைக்கின்றோம் வாழ்வைச் சுரண்டுகின்றோம்;150
சாத்திரத்தின் பேர்சொல்லித் தாழ்த்திவிட்ட மக்களுக்கு
ஆத்திரங்கள் தோன்றாமுன் அன்போ டவர்தமக்குக்
கொட்டு முழக்கோடு கோவிற் கதவெல்லாம்
தட்டித் திறந்துவிட்டோம் சாதி தொலைத்தோமா?
தீண்டாமை வேண்டுமெனச் செப்பித் திரிகின்ற
வேண்டாத *பூரிகளும் மேலோங்கிப் பேசுகின்றார்;
தேர்தலிலே சாதி தெளியத் தெரியவைத்தோம்
ஊர்முழுதும் வேர்பலவாய் ஊன்றிக் கிளைக்கவிட்டோம்;
சாதிக்கு நன்மதிப்பு சற்றே குறைந்தாலும்
வீதிக்குள் வீட்டுக்குள் வீறு குறையவில்லை;160
எல்லாரும் ஓரினமென் றெண்ணி நடக்கவெனச்
சொல்லாத ஏடில்லை, சொல்லாத் தலைவரிலை!
இன்னும் மதவெறியை எள்ளவும் போக்கவிலை
என்னும் படியிங்கே எங்கும் மதச்சண்டை;