பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 23

வேண்டா எண்ணங்கள்

நன்றியுணர் வுள்ளதென உலகம் போற்றும்
    நல்லுணர்வு கொண்டிருந்தும் எச்சில் உண்டி
ஒன்றுபெறத் தன்னினத்தைப் பகைக்கும் நாய்போல்
    உயர்பதவி பெறுதற்கே தன்னி னத்தைக்
கொன்றுகுழி தோண்டுவது வேண்டா எண்ணம்;
    கொடும்பழிகள் செய்திருந்தும் உடைகள் மாற்றி
வென்றிபெற உலகோரை ஏய்த்து வாழ்ந்து
    விளையாடித் திரிவதுவும் வேண்டா எண்ணம்;(12)

ஒருகுலமே உண்டெனஇவ் வுலகுக் கோதும்
    உயர்நாட்டிற் சாதிமுறை வேண்டா எண்ணம்;
தெருவோடு போவாரைக் கேலி செய்யும்
    சிறுபுத்தி நல்லவர்க்கு வேண்டா எண்ணம்;
திருவுயர அறிவுயர வாழ்தல் கண்டு
    தேய்ந்துமனம் புழுங்குதலும் வேண்டா எண்ணம்;
சிறவயிறு கழுவுதற்கு மானம் விட்டுச்
    சீரிழந்து வால்பிடித்தல் வேண்டா எண்ணம்;(13)

வேண்டிய எண்ணங்கள்

எண்ணுதற்கு மனம்வேண்டும், எண்ணிப் பின்னர்
    எடுத்துரைக்கும் உரம்வேண்டும், இதனைச் செய்ய
நண்ணுபவர்க் கிடங்கொடுக்க வேண்டும், அன்றி
    நலிவுதரத் தடைசெய்ய எண்ணல் நன்றோ?
கண்ணெதற்குக் காட்சிகளைக் காண அன்றோ?
    காணாமற் கண்மூட விழைதல் நன்றோ?
உண்ணுதற்குப் பயனில்லா உண்டி ஏனோ?
    உரிமைநல்கல் ஆள்வோர்க்கு வேண்டும் எண்ணம்;(14)