பக்கம் எண் :

24கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

நாளைக்கு மாணவரே நாட்டை ஆள்வோர்
    நம்கையில் எதிர்காலம் உளதே என்று
நாளுக்கு நாளுணர்ந்து கடமை ஆற்றும்
    நல்லுணர்வே ஆசாற்கு வேண்டும் எண்ணம்;
வேளைக்கு வந்திருந்து காலம் பேணி
    வினையின்மேற் கருத்தூன்றி ஆசாற் போற்றிக்
கேளிக்கை விடுத்தொழித்து மாண்பை ஆக்கக்
    கிளர்ந்தெழுதல் மாணவர்க்கு வேண்டும் எண்ணம்(15)

துன்புறுவோர் நிலைகாணின் துடித்துச் சென்று
    தோள்தந்து துயர்துடைக்கும் எண்ணம் வேண்டும்;
அன்பொன்றே நிறைகின்ற எண்ணம் வேண்டும்;
    அரிவையர்க்கும் உரிமைதரும் எண்ணம் வேண்டும்;
என்பெறினும் நடுநிலைமை வழுவா எண்ணம்
    எல்லோர்க்கும் இனியசொலிப் பணியும் எண்ணம்
முன்பிருந்த நன்றியுணர் வெண்ணம் வேண்டும்;
    மொழிந்தஇவை நாகரிக எண்ணம் என்பர்.(16)

கல்லூரிக் கல்விசொலத் தமிழே வேண்டும்
    கலைச்சொற்கள் தமிழ்மொழியில் ஆக்கல் வேண்டும்
மெல்லோசைத் தமிழிசையே முழங்க வேண்டும்
    மேலுயர்ந்த கோவிலுளும் தமிழே வேண்டும்
வல்லூறாய் வருமொழிகள் இங்கு வேண்டா
    வடவருக்குத் தாள்பிடித்துப் பதவி ஏற்கும்
நல்லோரே நும்தாயை இகழ்ந்து கூறேல்!
    நம்நாடு தமிழ்நாடென் றாதல் வேண்டும்(17)