பெண்ணொருத்தி நெஞ்சிரங்கிப் பேருதவி செய்தமையால் உண்ண வழியுண்(டு) ஒருநா ழிகைபொறுப்பீர்! ஆக்கிப் படைக்கின்றேன் அத்தான்” என;அவளை நோக்கிமுகம் தாழ்த்திப்பின் நூலெடுத்தேன் பாப்புனைய; சித்தம் கலங்கியதால் சீர்தளைகள் மாய்ந்தனவே எத்துயரம் வந்தாலும் எல்லை கடந்தறியேன் பாவை நிறுத்திவிட்டேன்; பையன் சிறுவனைஎன் பாவை அடிக்கப் பதறுவதைக் கேட்டெழுந்(து) ஏனடித்தாய்? என்றேன்; “திருடியதால்” என்றவுடன் நான்துடித்து நாமடித்துச் செய்தனையோ? என்றதட்ட, “ஆமாம், பசியப்பா அன்னம் திருடிவிட்டேன் தீமை இனிச்செய்யேன் சீற்றம் தவிர்”கென்றான்; வாயடைத்துப் போயினேன்; வாழ்வில் உணவின்றேல் தீயனதாம் பல்கும், திருட்டுத் தொழில்பெருகும் என்றுணர்ந்து மன்னித் திளையவனை விட்டுவிட்டேன்; முன்றில்முன் என்சிறுவர் மோதி அடிதடிகள் செய்திருந்தார்; சீறிச் சினந்துரைத்தேன்; ஓர்சிறுவன் மெய்யுரைத்தான்; “என்னின் மிகுபண்டம் அண்ணனுக்(கு) அன்னை கொடுத்தாள், அதனால் பிணக்குற்றோம் என்னை அடிக்காதீர்!” என்றுரைத் தோடிவிட்டான்; ஓஓ! அதுசரியே, ஓரிடத்தில் உண்டிமிகின் ஓவாப் பகைமூளும், ஓநாய்ச் செயல்விஞ்சும், பாரிற் சமமாகப் பாத்தூண் கொடுத்துவிடின்* போரில் இறங்குகின்ற புன்மைகள்தாம் உண்டோ? வயிற்றுக் கவலையின்றேல் வாழ்க்கைவளம் எய்தும் *அயிர்ப்பில்லை; “உண்டிமுதற் றேஉணவின் பிண்ட” மெனச்
*பாத்தூண் கொடுத்து விடின் - பகுத்து உணவு கொடுத்து விட்டால் *அயிர்ப்பு - ஐயம் |