36 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
6. நட்பு எண்சீர் விருத்தம் அகத்துக்கண் மாசிலராய், இன்னாச் சொற்கள் அழுக்காறு வெகுளிஅவா நான்கும் நீக்கித், தொகுக்கின்ற செல்வத்தால் ஈத்து வந்து, தொண்டொன்றே பேணிவரும் தலைவ ரேறே! மிகப்பழைய தமிழ்காக்க அறப்போர் ஆற்றும் வேங்கைஎனும் கவிமணிகாள்! அரங்கம் காணத் தொகுப்பாக இவண்வந்தீர்! தமிழ வேளே!* தொழுதெனது கவிதைகளைப் பாடு கின்றேன்(1) வேண்டும் நட்பு வளர்பிறையின் இயல்பினதாய், புலமைச் சான்றோன் வகுத்துரைத்த நூல்நயம்போல் இனிமைத் தாகித் தளர்நிலையில் உடுக்கைஇழந் தவன்கை போலத் தானேவந் துதவுவதாய், அகம்ம லர்ந்து வளருவதாய், மிகுதிக்கண் இடித்து ரைத்து வாழ்வுதரும் பண்பினதாய், நற்கு ணத்தின் விளைநிலமாய்ப் பழிநாணு கின்ற நட்பே விழைகஎன வள்ளுவப்பே ராசான் சொன்னான்(2)
*தமிழவேள் - அரங்கில் அமர்ந்திருந்த திரு. பி.டி. இராசன் |