வேண்டா நட்பு சூதுமிகு நெஞ்சினராய்ச் சிரித்துப் பேசிச் சொல்வேறு வினைவேறு பட்டார் நட்பும், பாதகங்கள் செய்யார்போல் தொழுது நின்று படையொடுங்கும் கையுடைய ஒன்னார் நட்பும், தீதறியா நன்மனத்தால் அமையார் நட்பும், திறம்படுநூல் பலகற்றும் உள்ளம் மாணாப் *பேதுடையார் நட்புமிவை தீமை எல்லாம் பெருக்கிவிடும் கொள்ளற்க என்றும் சொன்னான்(3) உணர்ச்சி நட்பு காடெல்லாம் கழனியென வளங்கொ ழிக்கக் காவிரித்தாய் அருள்சுரக்கும் சோழ நாட்டுப் **பீடுயர்கோப் பெருஞ்சோழன், பாண்டி நாட்டுப் பெரும்புலமைப் பிசிராந்தைப் பெயரோன், என்போர் ***பாடரிய ஒருவர்புகழ் ஒருவர் கேட்டுப் பழகலலால் சேர்ந்திருந்து பழகல் இல்லார் ஊடெழுந்த உயர்நட்பின் திறத்தை நம்மால் உணர்ந்துரைக்க எளிதாமோ உலகீர் இன்றே?(4) ¶வடக்கிருந்தான் அச்சோழன் என்று ணர்ந்து வழியருமை கருதிலராய் விரைந்து வந்து படக்கிடந்தார் அப்புலவர் என்ற செய்தி பாரறியும்; அழிவின்கண் அல்லல் உற்றுக் கிடப்பதுவே நட்பென்றும், உணர்ச்சி நட்பாங் கிழமைதரும், புணர்ச்சியது வேண்டா என்றும் எடுத்துரைத்த இலக்கணத்துக் கிலக்காய் உள்ளோர் இவ்வரிய இருநண்பர் அன்றோ சொல்வீர்(5)
*பேதுடையார் - அறியாமை உடையவர், **பீடு - பெருமை ***பாடரிய - பாட அரிய வடக்கிருத்தல் - வடக்கு நோக்கியிருந்து உண்ணாது உயிர் துறத்தல் |