பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 43

7. யாதும் ஊரே யாவரும் கேளிர்

வெண்கலிப்பா

வணக்கம்

செந்தமிழ்க்குக் காவலரே சிதம்பரநா தப்பெரியீர்!
பைந்தமிழின் பாடலுக்கோர் பரம்பரையைத்* தந்தவரே!
இந்தக் கவியரங்கில் எழுந்தருளுங் கவிமணிகாள்!
வந்து செவிமடுப்பீர்! வணங்கிக் கவிசொல்வேன்:

சுவை பிறந்தது

ஓங்கும் மலைக்குகையில் உயர்ந்த மரக்கிளையில்
ஆங்காங்கே தனிமனிதன் ஆர்ப்பரித்து வாழ்ந்திருந்தான்

கூட்டு வாழ்வறியான் கொல்லும் வினையுடையான்
காட்டு வாழ்வறிவான் காணும் விலங்கினத்தை

வேட்டைத் தொழில்புரிந்து வேகாத் தசையுண்பான்,
காட்டு நெருப்பிடையே கருகிக் கிடந்தவொரு

ஆட்டின் தசைசுவைத்தான் அடடா! சுவைகண்டு
போட்டுப் பொசுக்கிப் புசிப்பதுவே தொழிலானான்:

மொழி பிறந்தது

வனவிலங்கை ஓர் நாள் வளர்நெருப்பிற் சுடுங்காலை
அனல்சிறிது தாக்கியதால் ‘ஆஊ’ என் றலறிவிட்டான்

உள்ளத் துடிப்பை உணர்த்தும் ஒலிக்குறிப்பைத்
தெள்ளத் தெளிந்துணர்ந்தான் தீசுட்ட அந்நாளில்;


*பரம்பரையைத் தந்தவர் -அன்று கவியரங்கிற் கலந்துகொண்ட பாவேந்தர் பாரதிதாசனார்