பக்கம் எண் :

44கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

பக்கத்துக் காடுறைவோன் பலநாள் வருதலிலான்
புக்கான் ஒருநாள் புதுமனிதன் வரவுணர்ந்து

உள்ளத் தெழுமகிழ்ச்சி உந்தத் தலையசைத்து
மெள்ளத்தன் வாயிதழை ‘வா’ வென் றசைத்துவிட்டான்;

மற்றொருநாள் வேறொருவன் மனம்வருந்தச் செயல்செய்தான்
உற்றெழுந்த சீற்றம் உந்துதலால் உள்ளுணர்ச்சி

சுற்றிச் சுழன்று சூடேறிப் ‘போ’ வெனுஞ்சொல்
பட்டுத் தெறித்ததுகாண் பதறும் அவனுதட்டில்;

இவ்வண்ணம் ஓரெழுத்தால் இயலும் மொழிகண்டான்
செவ்வியநன் மொழிஎன்று செப்பும் முறையாகத்

தொகைவகையில் விரிவாக்கித் தொல்பழமைக் காலத்தே
வகைசெய்தான்; அம்மொழியே வளர்தமிழாக் காண்கின்றோம்.

தமிழ் காட்டும் உலகம்

தனிமுதலாம் அந்தத் தமிழ்காட்டும் நல்லுலகு
*துனிமிகுத்த நாடெல்லாம் தொழுதேத்தும் வழிகாட்டி;

யாதும்நம் ஊரேயாம் யாவரும்நம் கேளிரென்ற
தீதில்லா இவ்வுலகைத் தெளிதமிழே காட்டிற்றுப்

போருலக வெறியர்க்குப் புத்திவர நெறிகாட்டி
ஓருலக வழிகாட்டும் உயர்மொழிதான் எங்கள்தமிழ்

என்னும்போ துடல்சிலிர்க்கும் எலும்பெல்லாம் நெக்குருகும்
உன்னும் உளங்குதிக்கும் உடலெல்லாம் தான்குதிக்கும்

இன்னும்நாம் அவ்வுலகை ஏறிட்டும் பார்த்திலமே
என்னும்போ துளம்வருந்தி இரங்கலலால் என்செய்வோம்?


*துனி - பகைமை