பக்கம் எண் :

48கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

பெருமைசொலி அத்தனைக்குந் தெய்வங் கண்டு,
    பெண்பார்த்து மணமுடித்துப் பிள்ளைப் பேறும்
உருவாக்கி, ஒருசிலரை இரண்டாந் தாரத்
    துட்படுத்திப் பிறர்மனையை நாட வைத்துச்
சிறுவர்விளை யாடலென ஆடிவிட்டுச்
    செம்மைநெறி காணாமல் திகைத்து நின்றோம்(3)
இருள்சேர இவ்வண்ணந் திகைக்குங் காலை
    எழுந்ததுவோர் செம்பரிதி, உலகுக் கெல்லாம்
மருள்போக ஒளிதந்து கடவுட் பாங்கை
    மறுவறநன் குணர்த்திற்று; செம்மை கண்டோம்;
திருவுடைய வள்ளுவனாம் பரிதி காட்டும்
    திருநெறியே திரு. வி. க. வேண்டி நின்றார்
திருநீறு பொலிநெற்றி உடையா ரேனும்
    தெய்வநெறி பொதுநெறியே கூறி வந்தார்(4)

குறள் நெறியர்

அழுக்காறும் அவாவெகுளி இன்னாச் சொல்லும்
    அகற்றியநன் மனத்துக்கண் மாசொன் றின்றி,
ஒழுக்கமுயிர் எனஓம்பி, அறமே போற்றி,
    உள்ளத்தாற் பொய்யாமல் ஒழுகி, என்றும்
வழுக்காமல் குணமென்னும் குன்றில் ஏறி,
    வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, நெஞ்சில்
தழைக்கின்ற செந்தண்மை பூண்ட ஒன்றால்
    தகவுடைய அந்தணராய் விளங்கி நின்றார்(5)
நாவதனாற் சுட்டவடு ஆறா தென்றே
    நாகாத்தார் திறமுடனே யாவுங் காத்தார்;
*காவலரும் ஏவல்செயக் காத்தி ருக்கக்
    கற்றறிவு பெற்றிருந்தும் பணிவே கொண்டார்;


*காவலரும் - நாடு காக்கும் ஆட்சியாளர்