பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 51

சொல் வல்லார்

பேரூராம் சென்னைநகர் ஆலை ஒன்றில்
    பெருந்துயரம் பட்டதொழி லாளர் எல்லாம்
***ஈரேழின் ஆயிரவர் ஒன்று கூடி
    இனிப்பொறுமை இலைஎன்று கொதித்தெ ழுந்தார்;
ஓராளும் இல்லாமல் சுடுகா டாகும்
    ஒருவிரலைத் தலைவரவர் காட்டி நின்றால்;
ஆரூரர் திரு. வி. க. தலைவர் அந்நாள்
    அவ்விரலை அசைத்தனரா இல்லை! இல்லை!(13)

பசிவயிறும் குழிகண்ணும் உடையா ரேனும்
    பார்வையிலே சுட்டெரிக்கும் தோற்றங் கொண்டோர்,
விசைஒடிந்த உடலெனினும் ஒவ்வோர் என்பும்
    வில்லாகும் அம்பாகும் வீரங் கொண்டோர்,
¶நசையோடு தலைவர்தரும் ஆணை கொண்டு
    நாவசையாப் பொம்மைகளாய் நிற்றல் கண்டேன்;
பிசகாமல் இனிதுசொல வல்லார்ப் பெற்றால்
    பெருஞாலம் விரைந்துதொழில் கேட்கு மன்றோ?(14)

புகழ்த் தோற்றம்

எய்தரிய செயல்செய்து புகழால் மிக்கும்,
    எஞ்சாத பழிமிகவே இயற்றி நின்றும்,
வய்யகத்து மன்றதனில் தோன்றி நிற்போர்
    வகைவகையாப் பலருண்டு; நம்பே ராசான்
செய்யரிய செயல்செய்து தோன்றும் போழ்தே
    செவ்வியநற் புகழுடனே தோன்றி நின்றார்;
உய்வகையும் நமக்குரைத்து மறையும் போதும்
    உலகத்தார் உள்ளமெலாம் புகழக் கொண்டார்(15)


***ஈரேழின் ஆயிரவர் - பதினாலாயிரவர், ¶நசை - அன்பு