பக்கம் எண் :

52கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

நடுநிலைமை

நடுநிலைமை ஒருசிறிது பிறழ்ந்தா ரேனும்
    நாடாளும் அமைச்சரவை இவர்க்கும் ஆங்கண்
நடுவிருக்கும் ஒருபதவி தந்தி ருக்கும்,
    நான்வணங்கும் இத்தலைவர் நயந்தா ரல்லர்;
*“நடுவிகந்த ஆக்கத்தை வேண்டேன் வேண்டேன்
    **நடுவொரீஇ அல்லசெய ஒவ்வேன் ஒவ்வேன்
கெடுநிலைமைக் கேகாதீர்! நன்றே செய்வீர்!
    ***கிளந்தவெலாம் மறப்பதுவோ?” என்றே சொன்னார்(16)

சுருக்கத்தில் உயர்வு

இடுக்கண்கள் பலவரினும் சிரித்து நிற்பார்;
    இயல்பென்பார்;¶ அற்றேமென் றல்லல் கொள்ளார்;
‡கொடுக்கின்ற குணமுடைய ஒருவர் சென்று
    கொள்கவெனப் பெருநிதியம் தந்து நிற்கப்
‘படுத்திருக்கும் இந்நிலையில் செல்வம் ஏனோ?
    பண்புடையீர்! கொள்ளே’னென் றுயர்வுங் கொண்டார்
கெடுக்கின்ற ‡சுருக்கத்தில் உயர்வு வேண்டும்
    கிழவரவர் குறள்கூறும் மானங் கொண்டார்(17)

குணங்குற்றம் ஓர்தல்

பலவாகக் கிளைத்தெழுந்த கட்சிக் கூட்டம்,
    பாரிலுள அகச்சமையம், அவற்றி னோடு
குலவாத புறச்சமையம், மற்றும் இங்குக்
    கூட்டுகிற கூட்டமெலாம் பறந்து செல்வார்;
விலகாமல் அனைத்திடத்தும் புகுதல் கண்டு
    வியர்த்திருப்பர் பக்திஎனும் கவசம் பூண்டோர்;
நலமாகும் குணம்நாடிக் குற்றம் நாடி
    நடுவாக மிகைநாடி மிக்க கொண்டார்(18)


*நடுவிகந்த - நடுவு நிலைமை கடந்த **ஒரீஇ - நீங்கி, அல்ல - தீயன, ***கிளந்த - சொன்ன
¶அற்றேம் - பொருளிழந்தோம், ‡சுருக்கும் - பொருள் சுருங்கிய காலம்
‡கொடுக்கின்ற குணமுடைய ஒருவர் - கோட்டையூர் க.வீ. அழ. இராம. இராமநாதன் செட்டியார்.