தவஞ்செய்தார் பிறனாக்கம் காணினிவர் பொறாமை கொள்ளார்; பேணிஅவர் பெருமைஎலாம் புகழ்ந்து பேசி அறனாக்கம் மிகப்பெற்றார்; மறந்து நின்றும் அணுவளவும் பிறன்கேடு சூழார்; மேலும் உரன்ஆக்கும் தவஞ்செய்தார்; காடு செல்லார்; உடுப்பதுவுங் காவிகொளார்; துறவும் பூணார்; தரங்கெடுக்கும் ஆசையினால் அவஞ்செய் யாராய்த் தங்கருமஞ் செய்துதவஞ் செய்தார் ஆவர்(19) உயர்நட்பு தொழிலாளர் நலங்கருதி உழைக்கும் போழ்து தூய்மனத்துக் காந்தியிவண் வந்தார் என்று முழுவாழ்வுத் தமிழ்ப்பெரியார் காணச் சென்றார்; முகஞ்சுருக்கி *“எற்காணக் குருதி தோய்ந்து பழுதான கைகளோடு வந்தாய்?” என்று பகர்ந்ததுமே திடுக்கிட்டார் திகைத்து நின்றார்; தொழுதபடி ஒருசொல்லும் கூறா ராகித் துயர்படிந்த மனத்தினராய் இல்லம் சேர்ந்தார்(20) “அமைதிக்கே நமதுவிரல் அசையும் அல்லால் அறியாது மற்றொன்றும், குருதி ஏது? *சுமைமனத்தர் அவர்மனத்தை மாற்றி விட்டார்! சூதறியா நல்லுள்ள மேனும் கீழோர் இமைநொடியில் மற்றுவரோ? என்று சிந்தித் தினிதிருந்தார்; நோதக்க நட்டார் செய்யின் தமையறியாப் பேதைமையாம் கிழமை யும்மாம்; தமிழ்நெஞ்சம் வன்சொல்லை மறந்த தன்றே(21)
*எற்காண - என்னைக்காண *சுமை மனத்தர் - தீமை சுமக்கும் மனத்தினர் |