9. அழகப்பர் எண்சீர் விருத்தம் அகம்மலர்த்தும் செந்தமிழே! உயிரே! மெய்யே!* அகிலத்து மொழிமுதலே! அன்பே! பண்பே! **புகல்கொடுத்துச் சிறியேனை ஆட்கொள் செல்வீ! பொழுதெல்லாம் களிப்பருளும் தெய்வத் தாயே! பகைதவிர்த்துத் தமிழ்பாடும் என்றன் நாவால் பாரறிய அழகப்பன் புகழு ரைக்க வகைவகுத்த சொற்பொருளால் அணியால் ஆன்ற*** வளமிக்க கவிவெறிஎன் நெஞ்சில் ஏற்று!(1) பற்றறுக்கும் துறவுநிலை பூண்டி ருந்தும் பால்மொழியாம் தமிழ்ப்பற்றுத் துறவா உள்ளம் பெற்றதனால் தாய்மொழிக்குத் தீமை என்றால் பேசாத மேடையிலும் பேசு கின்ற நற்றலைவ! கலைத்திருநாள் காணும் நல்லீர்! நலஞ்சான்ற கவிபுனைவீர் எங்கள் நெஞ்சில் உற்றிருக்கும் அழகப்ப வள்ளால்! அன்பின் உளங்கனிந்த என்வணக்கம் கொள்க நன்றே(2)
*உயிரே மெய்யே - உயிரும் மெய்யும் போன்ற தமிழே, உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் ஆகிய தமிழே. **புகல் - தஞ்சம், ***ஆன்ற - நிறைந்த |