பக்கம் எண் :

58கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

அவையடக்கம்

முன்னைஎழு வள்ளல்தமைச் சங்கச் சான்றோர்
    முழுமையுறு செந்தமிழால் புகழ்ந்துரைத்தார்
என்னையுமோர் வள்ளல்புகழ் பாடச்சொல்லி
    ஏற்றமெனக் களித்தமைக்கு நன்றி; ஆனால்
முன்னையவர் பொருள்கொண்டு, மகிழ்ந்து, வள்ளல்
    முன்னின்று, விலையில்லாக் கவிதை சொன்னார்;
என்கவிக்குப் பொருளில்லை; அவனும் இல்லை
    எனினும்உயர் புகழுக்கே பாடுகின்றேன்(3)

என்குலத்துப் பாவலர்தம் பனுவல் எல்லாம்
    எழுவள்ளல் செவிகுளிரக் கேட்டார் அந்நாள்;
என்கவிக்குச் செவிகொடுக்க அழகன் இல்லை
    ஏங்குகிறேன்; அவனுயிரைக் குடித்த காற்றே!
பொன்னுடலைச் சுவைத்தொளிர்ந்த தீயே! வானே!
    புல்லர்தமைப் பொறுத்திருக்கும் நிலமே! நீரே!
தென்னகத்து வள்ளலிவன் செய்த தொண்டைச்
    சிறுசெந்நா விளம்புவதைக் கேட்பீர்! கேட்பீர்!(4)

எழுவரா? எண்மரா?

வரையாது வழங்குகொடை வள்ளல் தம்மை
    வரையறுத்தார் முன்னாளில் எழுவர் என்றே;
குறையாமல் கல்விக்கே கோடி கோடி
    கொடுத்துயர்ந்த அழகனுமோர் வள்ளல் ஆனான்


அவையடக்கப் பாடலின் பின் இரண்டடிகள் ஏற்றங் கூறுவது போலமைத்து அவையடக்கம் உணர்த்துகின்றன.
ஏற்றம் : சங்கத்தார் பொருள் பெற்றுப் பாடினர்; நான் பொருள் பெறாது பாடுகிறேன். சங்கத்தார் அரசர் முன்னின்று பாடியமையால் முகமன் உரைத்திருக்கலாம்: அழகப்பர் இல்லாத பொழுது நான் பாடுவதால் உண்மையான புகழையே பாடுகிறேன். மேலும் சங்கத்தார் கவிதைகள் விலை போகாதவை.
அவையடக்கம் : சங்கத்தார் பாடல்களிற் பொருளுண்டு; என் பாடலிற் பொருளே இல்லை. அரசர் இருந்தமையால் மகிழ்ந்து பாடினர் அப்புலவர்; அழகப்பர் இல்லாமையால் நான் வருந்திப் பாடுகிறேன். அவர்கள் பாடல் விலைமதிக்க முடியாதவை; என் கவிதைகள் எளியன. எனினும் என் புகழுக்காகப் பாடுகிறேன்.