கரவாத பிறரெவரும் இருப்ப ரேல்இக் காலத்தும் உளரெழுவர் வள்ளல் என்பேம் பிறராருங் காணேமால், ஒருவன் நின்றான் பெருங்கொடைஞர் அறுவர்க்கு யாண்டுச் செல்கேம்?(5) ஆதலினால் முன்வகுத்த எழுவர் என்ற எண்மாற்றி அவருடனே எண்மர் என்போம்; ஓதுகின்ற மாணவரும் தேர்வுத் தாளில் உயர்வள்ளல் எண்மரென எழுதிப் போந்தால் பேதலியேம் மதிப்பெண்கள் உரிய நல்கிப் பெருங்கொடையால் வள்ளலென யாமும் வாழ்வோம்; ஏதமிலான் இத்துறையில் புரட்சி செய்தான் எவரிந்த அழகப்ப வள்ள லொப்பார்?(6) ஒரே வள்ளல்! அன்றிருந்த கொடையாளர் எழுவர் தாமோ? ஆயிரவர் இருந்தமைக்கு நூல்கள் சான்றாம்; என்றாலும் வள்ளலெனும் பெயரைப் பெற்றார் எழுவர்க்கு மேலில்லை; இற்றை நாளும் துன்றியதம் பொருளீவார் பலர்தா மேனும் துணிந்துரைக்கின் வள்ளலெனும் புகழைத் தாங்கி நின்றிருக்க அழகப்பன் ஒருவ னேதான்; நெஞ்சிருப்போர் கைவைத்தால் இதயம் சொல்லும்(7) அரசரும் வள்ளலும் தென்னாட்டுத் திசைதோறும் கோவில்கட்டித் திருப்பணிகள் எனும்பெயரால் அள்ளி வீசும் இந்நாட்டுப் பரம்பரையில் இருவர் தோன்றி இருநிதியம் கல்விக்கே வாரித் தந்தார்; முன்கூட்டிச் செய்தவர்நம் செட்டி நாட்டு முதல்மன்னர்;* அழகப்பர் மற்றோர் வள்ளல்; என்பாட்டுக் கடங்காது வள்ளல் உள்ளம் **கொடைமடமென் றிருசொல்லே சொல்லத் தோன்றும்(8)
*முதல் மன்னர் - செட்டிநாட்டரசர் அண்ணாமலையார் **கொடைமடம் - அள்ளிக் கொடுப்பதில் அறியாமை |