60 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
காடு கெடுத்தான் நடப்பவர்தம் கால்வருந்த முட்கள் தைக்கும் நச்சரவம் பலநெளியும் கொடிய காட்டைக் கெடுத்தொழித்து நகராக்கிக் கல்விக் கூடம் கிளைத்தெழும்பத் தானுறையும் இல்லுஞ் சேர்த்துக் கொடுத்திருக்கும் இயல்புடையான் ஈட்டுஞ் செல்வம் அத்தனையும் ஈத்துவக்குங் குமணன் போல்வான் படித்துவரும் பன்னூறு மக்கள் உள்ளம் பைந்தமிழால் அள்ளூறிப் பாடும் வள்ளல்(9) கலைக்கோவில்கள் அகரமுதல் நெடுங்கணக்கை ஓது தற்கும் அடுத்தடுத்த உயர்நிலையில் கற்ப தற்கும் மகளிருயர் கலைக்கல்வி பயிலு தற்கும் மாணாக்கர் கலைஎழிலை அறிவ தற்கும் தகவுடைய ஆசிரியப் பயிற்சிக் கென்றும் தளராத உடற்கல்வி கற்றற் கென்றும் புகலரிய விஞ்ஞானம் தொழில்நு ணுக்கம் பொறியியல்என் றத்தனைக்கும் கோவில் கண்டான்(10) துணிவுடையான் வணிகத்தால் அழகப்பன் அளகை* அப்பன் வாழ்வடைந்தான் எனினும்அதில் மூழ்க வில்லை; வணிகத்தில் பெரியதொரு இலாப மென்றால் வருமுன்பே அத்தொகையைக் “கொடுத்தேன்” என்பான் துணிவகத்தான் மிகப்பெரிய இலக்கம் என்ற தொகைக்குரிய மதிப்பெல்லாம் குறைத்து விட்டான்; **பணிகுறித்துக் கொடுத்ததொகை எண்ணு வீரேல் பகர்ந்ததனைச் சரிஎன்பீர் பொய்ம்மை இல்லை!(11)
*அளகை அப்பன் - குபேரன், **பணி - கல்விப்பணி பல்கலைக் கழகம் ஆதல் வேண்டும் என்ற கவிஞரின் எண்ணம் பிற்காலத்தில் பலித்து விட்டது. |