பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 61

பாரி இருவர்

நனிசெல்வம் ஆங்காங்குக் கல்விக் காக
    நயந்தளித்த பேருள்ளம் கண்ட நாட்டார்
நுனிமூக்கிற் சுட்டுவிரல் சேர்த்து, “முன்னை
    நூலிலன்றி யாங்கணுமே கண்ட தில்லை!
இனிநமக்குப் பாரிஎன இருவர் கண்டோம்”
    எனவியந்தார்; அச்செம்மல் விழைவே போல
இனிதெனப்பல் கலைக்கழகம்* ஆதல் வேண்டும்
    இருநிலத்தில் அவர்புகழும் ஓங்க வேண்டும்(12)

பெற்றோரானான்

கல்லூரி வட்டத்தில் இனிதி ருந்து
    கல்விபயில் பன்னூறு மக்கள் காண்பான்
எல்லாரும் சான்றோராம் என்று கேட்க
    இனியதொரு தாயாவான்; ஆடல் பாடல்
வல்லார்போல் மாணவர்கள் நிகழ்ந்துங் காலை
    வள்ளலிவன் தந்தையினும் மகிழ்வே கூர்வான்;
நல்லானை நோய்முறிக்க வீழ்ந்த போதும்
    நயவுரைகள் நகைச்சுவையில் வழங்கி வந்தான்(13)

பெரியார் புகழ்ந்தார்

முயன்றுபெறும் செல்வமெலாம் தமக்குப் பின்னர்
    முழுவுரிமை புதல்வர்க்கே ஆதல் உண்மை;
அயர்வின்றி இவனுழைப்பால் கண்ட செல்வம்
    அவனுக்கே சொந்தமெனப் பெரியார் நாவால்*
நயந்துரைக்கப் பெரும்பேறு பெற்றா னேனும்
    நான்சொல்வேன்; பட்டையந்தான் அவற்கே யன்றிப்
பயன்முழுதும் நம்மக்கள் துய்க்கின் றாரால்
    பாடுதும்நாம் பாடுதும்நாம் வள்ளல் பேரே(14)


*அழகப்பர் கல்லூரிகளுக்கே செல்வமெலாம் சேர்வதால் அச்செல்வம் அழகப்பருக்கே சொந்தமாகிறது என நகைச்சுவைபடப் பெரியார் பேசினார்.