பக்கம் எண் :

62கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

நிலையாமையுணர்ந்தவன்

நிலையாமை நிலையாமை என்று சொல்லி
    நிறைபொருளைத் தொகுப்பார்கள் வகுத்தல் காணார்;
அலைவார்கள் இனுஞ்சேர்க்க மேலுஞ் சேர்ப்பர்;
    ஆனாலும் இன்பமொரு சிறிதுங் காணார்;
அலையாழி பலகடந்தே இவனுஞ் சேர்த்தான்
    அப்படியே வகுத்தளித்தான் தனக்கொன் றில்லான்;
நிலையாமை நன்குணர்ந்தான் இவனே அன்றோ?
    நிலைத்தபுகழ் இன்பமிகக் கொண்டு நின்றான்(15)

அவனோர் கஞ்சன்!

பொருள்கொடுத்தான் மிகக்கொடுத்தான்; அதனின் மேலாப்
    புகழ்கொண்டான்; கொடைசிறிது, சிறிய ஒன்றால்
அருள்பழுத்தான் கொண்டதுதான் மிகுதி என்பேன்;
    அதிலென்ன வியப்புளதோ? மேலும் அன்னான்
ஒருவகையில் கஞ்சனெனக் குறையும் சொல்வேன்;
    உவந்தளித்தான் நிதியமெலாம், உண்மை; ஆனால்
வருபுகழில் சிறிதேனும் பிறர்க்கீந் தானோ?
    வருகின்ற புகழெல்லாம் வைத்துக் கொண்டான்(16)

எவ்வுயிர்க்கும் அருளாளன்

வாடுபயிர் காணுங்கால் வாடி னேனென்
    றுளங்கனிய வாய்மொழிந்தார் வடலூர் வள்ளல்;
ஆடுமலர்க் கொடிகண்ட மற்றோர் வள்ளல்
    அதுபடரத் தேர்தந்து *படர்து டைத்தான்;
சாடுபுயல் வீசுகையில் நமது வள்ளல்
    தான்வளர்த்த செடிகளெலாம் வீழக் கண்டு
வாடியதை நாமுணர்வோம்; எவ்வு யிர்க்கும்
    வள்ளலென்பார் இரங்கியருள் செய்வர் போலும்(17)


*படர் - துன்பம்