பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 63

வள்ளல்களை வென்றான்

பாரிவிடும் தேரதனால் வாழ்வு பெற்ற
    படர்முல்லைக் கொடிஒன்றே; செல்வம் எல்லாம்
வாரிவிடும் அழகப்பன் தந்த வீட்டால்
    வாழ்வுபெறும் பூங்கொடிகள் கணக்கில் உண்டோ?
**சோரிவிடத் தலைதந்தான் குமணன் என்பர்;
    சொல்லரிய பொருளெல்லாம் கல்விக் காக
***மாரிபடத் தந்ததன்மேல் வாழ்வே தந்தான்
    மனமுள்ளோர் இவன்கொடையின் அருமை காண்பர்(18)

படுபெயலால் மிகநனைந்து குளிரால் வாடிப்
    பதைபதைத்து நடுநடுங்கக் கண்டு, நெஞ்சு
துடிதுடித்தே அடடா ஓ! என்று பேகன்
    துய்யமயில் ஒன்றுக்கே ஈந்தான் போர்வை;
கொடையழகன் பலமயில்கள் கற்ப தற்குக்
    குடியிருக்கும் தன்வீட்டை ஈந்தான் கண்டோம்;
கொடைமடத்தால் உளம்பெரிது பேக னுக்கு,
    கொடுப்பதிலே உரம்பெரிதே அழக னுக்கு(19)

தமிழ்நாடு உலகோடு சமம்

வண்மைமிகும் ஆய்தன்னால் நமது தெற்கு
    வடக்கோடு சமமாக நின்ற தென்றார்;
உண்மையிது; நானொன்று துணிந்து சொல்வேன்;
    உறங்கினுமோர் கொடைக்கனவே காணும் நம்பன்
வண்மையினால் உலகோடு சமமே என்பேன்;
    வடக்கென்ன கிடக்கட்டும் என்று ரைப்பேன்;
பெண்மையுளார் அஞ்சிடுவர் ஆண்மை கொண்டேன்
    பேசுகின்றேன் பாடுகின்றேன் மறுப்பும் உண்டோ?(20)


**சோரி - இரத்தம், ***மாரிபட - மழை தோற்க