பக்கம் எண் :

6கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

தமிழ் உண்டா?

வானொலியில் இசையரங்கில் தமிழ்தான் உண்டா?
    வளங்கொழிக்கும் நிழற்படத்தின் பேச்சில் பாட்டில்
தேனமிழ்தத் தமிழுண்டா? பழிக்கக் கண்டோம்;
    தெளிவின்றி ஒன்றிரண்டு தமிழைச் சொல்லும்;
ஏனென்று கேட்பதற்குத் தமிழர் உண்டா?
    எடுத்துரைப்பார்க்(கு) அத்துறையில் இடமே யில்லை!
*கானின்ற அத்திப்பூ பூத்தாற் போலக்
    காண்கின்றோம் ஒன்றிரண்டு தமிழ்ப்ப டங்கள்(9)
வாழ்த்தொலிகள் மிகுகின்ற திரும ணத்தில்
    வடமொழியாம் செத்தமொழி சுமந்து செல்லும்
**காழ்ப்புமிகும் மொழிப்பகைவர் புலம்பல் நன்றோ?
    கண்கெட்டுத் திரிவதுவோ? வேற்றி னத்தைத்
தாழ்த்துகிறேன் எனக்கருதேல்; அவ்வி னத்தார்
    தமிழ்த்தலைவர் தலைமைகொள மணங்கொள் வாரோ?
தாழ்த்துவது நாமல்லேம்; நம்மி னத்தைத்
    தாழ்த்துகிறார்; தாழ்வதுவோ தமிழ வாழ்வு?(10)
செய்தித்தாள் நடத்திவரும் திருக்கூட் டத்தார்
    செய்துவரும் மொழிக்கொலையை நினைத்தால் நெஞ்சம்
***வெய்துயிர்த்துச் சாவதன்றி வழியே யில்லை;
    வேண்டுமெனக் கொலைசெய்யும் இதழ்கள் தம்மைக்
கொய்தெறிய மனமின்றி நாமே காசு
    கொடுத்தவற்றை வளர்க்கின்றோம்; துணிந்தெ ழுந்து
செய்யதமிழ் இதழ்நடத்த வருவோர்க் காணின்
    சிரித்தொதுக்கி விடுவதுவோ தமிழ வாழ்வு?(11)


*கான் நின்ற - காட்டில் நின்ற, ** காழ்ப்பு - முற்றிய
***வெய்துயிர்த்து - பெருமூச்சு விட்டு