பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 7

தமிழும் கடவுளும்

சிவபெருமான் மனைவியுடன் முருகன் என்னும்
    சிறுவனையும் உடன்கொண்டு மதுரை நாட்டில்
உவகையொடு தமிழ்மொழியின் சுவையைக் கூடி
    உண்ணுதற்கே அவதரித்தார் என்பர் சைவர்;
தவமுனியாம் திருமழிசை பாடல் கேட்டுத்
    தண்டமிழின் பின்சென்றான் திருமால் என்பர்;
இவரெல்லாம் சமயத்தில் தமிழைக் கூட்டி
    இனிதாகப் பேசிடுவார் ஏற்றங் கொள்வார்(12)
கோவிலுக்குள் தமிழ்மொழியைப் புகுத்தல் காணின்
    கொதித்தெழுவார் மேற்படியார்; முதலில் நின்று
தேவனுக்குத் தமிழ்சொல்லல் தீமை என்பார்;
    தேவருக்குப் *பாடையுண்டு அதைவி டுத்துச்
சீவனிலாத் தமிழ்சொன்னால் செத்தோம் என்பார்;
    சிவன்மாலும் செத்தொழிவார் என்பார் அந்தோ!
கூவுகிற இக்குரற்குச் செவிகொ டுத்துக்
    குலைவதுவோ தமிழ்வாழ்வு? ஆய்ந்து சொல்வீர்!(13)

அரசியல் மொழியில்

பொதுமொழியாம் எனும்பேரால் வளமே யில்லாப்
    புதுமொழியைச் சிறுமொழியைப் பள்ளி தோறும்
புதுவழியில் புகுத்துகின்றார் இந்த நாட்டில்!
    புன்மொழியின் அடிமைகளாய்ப் புத்தி கெட்டுக்
கதியற்றுப் போவதுவோ தமிழர் எல்லாம்?
    கையற்றுப் போவதுவோ தமிழின் செல்வம்?
மதுநிகர்த்த செந்தமிழின் தூய்மை எல்லாம்
    மாய்வதுவும் தேய்வதுமோ தமிழ வாழ்வு?(14)


*பாடை - பாஷை என்பதன் திரிபு