பக்கம் எண் :

8கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

எல்லைக்கோட்டில்

கயலொடுவில் புலிக்கொடியை இமயக் கோட்டில்
    கட்டிஅதன் எல்லைவரை தமிழர் ஆண்டு
வியனுலகில் புகழ்நாட்டி வீர வாழ்வில்
    வியப்பூட்டி வாழ்ந்ததுவே தமிழ வாழ்வு;
அயலவர்க்கு வேங்கடத்தைப் பறிகொ டுத்தும்
    ஆண்மையொடு வாய்வீரம் பேசி நின்று
செயலற்றுத் தேவிகுளப் பகுதி தந்து
    தேம்புவதே இன்றுள்ள தமிழ வாழ்வு(15)

இலக்கியத் துறையில்

பாண்டியநன் னாட்டகத்துச் சங்கங் கண்டு
    பாவேந்தர் கோவேந்தர் ஒன்று கூடி
ஈண்டுபுகழ்த் தமிழாய்ந்து மொழியைப் பேணி
    இலக்கியங்கள் படைத்ததுமுன் தமிழ வாழ்வு;
கூண்டிலுறு மொழியாக்கிக் கொடுமை செய்து
    குறைமதியர் காவலராய்க் கூடி நின்று
வேண்டியதை இலக்கியமென் றெழுதிக் கொட்டி
    விளம்புவதே இன்றுள்ள தமிழ வாழ்வு(16)

போர்த்துறையில்

கைவேலைக் களிற்றின்மேற் பாய்ச்சி நின்று
    கடுகிவரும் வேழத்தை எதிர்க்க வேண்டி
மெய்வேலைப் பறித்தெடுத்து நகைத்து நின்று
    மேவாரை வென்றதுதான் தமிழ வாழ்வு;
மெய்வீரன் ஒருவனுடன் எதிரில் நிற்க
    மிகநடுங்கி மரங்களிடை மறைந்து நின்று
பொய்வீரங் காட்டுகிற புன்மை யெல்லாம்
    புகழ்மிக்க தமிழ்வாழ்வோ? வேறு வாழ்வாம்(17)