பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 65

அனைத்தும் ஈந்தான்

அள்ளியள்ளி வழங்குதற்குக் கையை ஈந்தான்
    அழகாகப் பேசுதற்கு வாயை ஈந்தான்
உள்ளமெனும் ஒருபொருளை உரத்துக் கீந்தான்
    உடம்பினையும் கொடுநோய்க்கே ஈந்தான் அந்தோ!
வெள்ளமென வருநிதியம் வாழும் வீடு
    வினைமுயற்சி அத்தனையுங் கல்விக் கீந்தான்
உள்ளதென ஒன்றில்லை அந்தப் போதும்
    உயிருளதே கொள்கவெனச் சாவுக் கீந்தான்(24)

அழகப்பா நகரம்

சாந்துணையும் ஈந்திருந்தோன் புகழைச் சாற்றச்
    சான்றோர்கள் பலர்வேண்டும்; ஒருவன் என்னால்
ஆந்துணையோ? சிலபாடல் முற்றுஞ் சொல்ல
    அமைவாமோ? காவியமே சிறிது சாலும்;
போந்துள்ள பெருமக்காள்! உம்மை ஒன்று
    போற்றிமிக வேண்டுகிறேன்; இந்த வட்டம்
சூழ்ந்துள்ள, பகுதியையும் ஒன்றே ஆக்கி
    **அழகப்பன் நகரெனப்பேர் சூட்டு வீரே(25)

தலைவர்:திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளார்

தலைப்பு:எட்டுத் தமிழ் வள்ளல் - அழகப்பர்

இடம்:அழகப்பர் கல்லூரி - காரைக்குடி

நாள்:27-10-1957


**அழகப்பர் நகர் எனப் பேர் சூட்டும் கவிஞரின் இவ்வெண்ணமும் பலித்து விட்டது.
இப்பாடல்களைக் கேட்ட அடிகளார் முடிவுரையில் உணர்ச்சி வயப்பட்டு அழுது விட்டார்.