பக்கம் எண் :

66கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

10. அரசியல் அறிஞன்

கலிவெண்பா

கூடிக் கவியரங்கம் கூர்ந்து செவிமடுக்க
நாடி இவண்வந்தீர்! நற்றலைமை ஏற்றுள்ள
*தூத்துக் குடிமுத்தே! தூய கவிபுனைவீர்!
ஏத்தி வணங்கி இயம்புகிறேன் என்கவிதை;

இல்லாள் ஏக்கம்

“கூரை பிரிந்ததனால் கொட்டுமழை அத்தனையும்
நேரே புகுந்து நிறைந்ததுகாண் நம்மில்லில்

ஈரமிகு மண்சுவர்தான் எத்தனைநாள் தாங்கிவரும்?
ஓரங் கரைந்தே ஒருபக்கஞ் சாய்ந்ததெனச்

சொல்லாத நாளில்லை சொல்லிப் பயனில்லை!
கல்லாகிப் போனீரோ? கற்பனையில் வாழ்கின்றீர்?

ஊரெல்லாம் இப்படியா உங்களைப்போல் வாழ்கின்றார்?
யாரிடம்போய் நானழுவேன்!” என்றழுதாள் என்மனைவி;

தூற்றாதே வாழ்க்கைத் துணைவியுனை வேண்டுகிறேன்;
*நேற்றே விளம்பி நெடுமூச்சு வாங்கவைத்தாய்!

இன்று *விளம்பி எடுக்காதே என்னுயிரை!
ஒன்று திரண்டிங் குருவாகும் கற்பனையால்


* தூத்துக்குடி முத்து - தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வாரக இருந்த பேராசிரியர் அ. சீனிவாசராகவன்
* நேற்று ஏவிளம்பி, இன்று விளம்பி ஆண்டு என்னுங் குறிப்புங் காண்க. *விளம்பி - சொல்லி