பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 67

புத்துலகஞ் செய்யப் புறப்பட்ட பாவளத்தைக்
கத்திக் கெடுக்காதே கட்டழகி எட்டியிரு!

என்றுவாய் மூடவில்லை, ஏந்திழையாள் புன்னகைத்து,
“நன்று கவிமணியே! நான்விலகி நிற்கின்றேன்,

வீட்டைப் புதுக்க விதியில்லை, முன்னின்று
நாட்டைப் புதுக்கவழி நாடுகிறீர்! அவ்வழியைத்

தெள்ளத் தெளிவாத் தெரிவை எனக்குரைப்பீர்!
உள்ளத் திருத்தி உணவை மறந்திருப்போம்”

என்றாள் அருகிருந்தாள்; என்னுயிரே! கூறுவன்கேள்!
பொன்றா நலம்பயக்கும் புத்துலகங் காண்பதெனில்

புத்துலகம் காணும் வழி

மாசு மறுவகற்றி, மாண்பை மிகப்பெருக்கிக்,
காசு பணங்கொழிக்கக், கல்வி நலஞ்செழிக்க,

மேழித் தொழில்சிறக்க, மீக்கூர் பசிபறக்க,
ஆழிக் கடல்வணிகம் ஆயிரம்பல் லாயிரமாய்ப்

பல்கிவர வேண்டுமடி! பாட்டால் முடிவதுவோ?
சொல்லும் வினைமுடிக்க நல்லரசே வேண்டுமடி!

புன்மைச் செயலொழித்து நன்மை புகவிடுத்தால்
உண்மைப் புதுவுலகம் உண்டாகும் ஈதுண்மை;

ஆள்வோர் புகுத்துசெயல் அத்தனையும் நன்றேஎன்
றாள்வோரே தீர்ப்பளித்தல் ஆமோ? அரசியலில்

வல்லவராய் நாளை வருவதெலாம் காண்கின்ற
நல்லவராய்க் கல்வி நலங்கொண்ட பேரறிஞர்