70 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
காத்துச் சுவைத்திருக்கக் கற்பனையும் சூழ்ச்சிகளும் மூத்துத் தலைதூக்கும் மூளை குழம்பிவிடும் வேண்டியவர் வேண்டாதார் வேண்டி அலைந்திடுவர் ஈண்டவரால் புத்துலகம் காண்டல் எளிதாமோ? வல்லவராய் மட்டும் வருபவரால் ஏதுபயன்? நல்லவராய் நாட்டு நலம்விழைவார் வேண்டும்? குடிஎன்றால் கள்என்று கூறும்அறி வாளர் படிசிறக்க ஆளப் பயன்படுதல் இல்லை; அரசென்றால் சுற்றும் மரமென்பார் தாமும் அரசு செலுத்துதற் காகாரே! உண்மைக் குடியரசின் நற்பொருளைக் கூர்த்துணர்ந்தார் நல்ல படியரசை ஆளப் பயன்படுவர் மாமயிலே! அறிஞர் கடமை ஆதலினால் அவ்வறிஞர் ஆசை பதவிஎனும் போதைகளில் சிக்குண்டு போகாமல், அஞ்சாமல், பாழும் அடிமைப் பழிசுமந்து தந்நலமே வாழும் முறையாலே வால்பிடித்து வாழாமல், நாட்டு நலங்கருதி, நாவீறு மிக்குயர்ந்து, கேட்டுச் செயலொழித்துக், கீழ்மைக் குணமொழித்துச், சிந்தித்துச் சிந்தித்துச் சிந்தனையில் காண்பவற்றை முந்திப் படைத்தரசை முன்னேற்ற வேண்டுமடி! அன்றே புதுவுலகம்! அவ்வுலகில் நாமரசர்! என்றேன்; “அறிஞரிலே அத்தகையார் உள்ளனரோ?”
|