72 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
11. குறிஞ்சி கலிவெண்பா பாண்டி எமக்களித்த பாரதி தாசனெனும் பாண்டியனே! எங்கள் பரம்பரைக்கு நற்றலைவா! சார்ந்து கவியரங்கில் தண்டமிழால் பாப்புனைவீர்! ஆர்த்திங்கு வந்த அவையோரே! என் வணக்கம்; வள்ளல் மலை தூய மனத்தொண்டர் சுப்ரமண்யத் தோன்றல்தமை மேய புகழ்போல மேலோங்கு நல்லமலை; பொன்னாடை போர்த்துப் பொலியுமவர் தோற்றம்போல் மின்னாடு மேகங்கள் மேற்போர்த்த பச்சைமலை; பண்ணிசைக்கும் வண்டினஞ்சேர் பைம்பொழில்கள் சூழுமலை; அண்ணலார் நெஞ்சம்போல் தண்ணென் றிருக்குமலை; வண்ண மலர்தோய்ந்து வாசம் பரிமாற நண்ணும் குளிர்தென்றல் நாடோறும் வீசுமலை; வள்ளல் கரம்போல மாணிக்கம் முத்தெல்லாம் அள்ளி இறைக்கின்ற வெள்ளருவி ஆர்க்குமலை; வந்தார்க்குத் தந்து மனங்குளிரச் செய்வதற்கு முந்துவார் போல முகில்குளிரச் செய்யுமலை; |