பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 75

தாவிக் குதித்தேன் தடந்தோளிற் கொண்டுவந்து
நீவிக் கொடுத்தேன்; நிலையுணர்ந்தாள் நின்றாள்;

தலைநிமிர்ந்து நோக்கினாள்; தையல் விழிதாம்
கொலைநின்ற அம்போ? கொடுவாளோ? கூர்வேலோ?

நெஞ்சத்துத் தைக்க நிலைதளர்ந்தேன் நோக்கினேன்;
வஞ்சியவள் நாணத்தால் மண்கீறும் கால்விரலைப்

பார்த்தாள்; அவளைநான் பாராமல் நிற்குங்கால்
பார்த்து நகைசெய்தாள்; பாவையவள் பொன்னகையைக்*

காட்டாமல் கொவ்வைக் கனியிதழாம் நற்கதவால்
பூட்டி மறைத்துவைத்தாள்; பூவை யிமையசைவு

வாவாவென் றென்னை வரவேற்புச் செய்வதுபோல்
சாவாமல் என்னுயிரைத் தாங்க உதவியதே!

அப்பார்வை நன்றி அறிவிப்போ? அல்லாமல்
தப்பாஎன் காதலுக்குத் தக்க பரிசளிப்போ?

குறிப்பறிதல்

என்று தடுமாறி ஏங்குங்கால் வேல்விழியில்
ஒன்றும் குறிப்புணர்ந்தேன் ஒப்புதலைக் கண்டுகொண்டேன்

ஒர்நொடியில் இத்தனையும் ஒன்றாய் நிகழ்ந்தனவே
கார்கண்ட தோகைமயில் ஆனேன் கணப்பொழுதில்;

கோலக் குறிஞ்சியிடைக் கூடிவரும் ஆறோடி
நீலக் கடலோடு நேர்ந்து கலப்பதுபோல்

குன்றிற் பிறந்த குறமகளே! என்னெஞ்சில்
ஒன்றிக் கலந்துவிட்டாய் ஓருயிர்நாம் என்றேன்;

‘மலைக்குறவர் பெண்ணுக்கு மாலையிட உங்கள்
குலப்பெருமை ஒப்புமோ? கூறுகநீர்’ என்றுரைத்தாள்;


*புன்னகை, பொன்னகை எனக் கூறப்பட்டதற்கேற்ப உதடுகள் கதவாக உருவகம் செய்யப்பட்டன.