பக்கம் எண் :

76கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

சாதி நமக்கில்லை

சாதிப் பிணக்கெல்லாம் சங்கத் தமிழ்மாந்தர்
ஆதிப் பழக்கமன் றவ்வழியில் வந்தவன்நான்

கீழ்மைக் குணமெல்லாம் கெட்டொழியப் புத்துலக
வாழ்வுக் குழைத்துவரும் வாலிபன்நான் மேலும்

குறிஞ்சிநில மக்கள் குறவரெனச் சொல்வர்
புரிந்தவர்கள் இக்குலத்தைப் புன்மைஎனப் பேசார்

மலைமுகட்டில் நிற்கின்றோம் மண்மீ திருப்பார்
நிலைவிட்டு நல்ல நெறிசெல்வோம் ஆதலினால்

காதற் பெருவழியில் கன்னி துணையாகப்
போதல் உளங்கொண்டேன் பொற்கொடியே! என்றேன்;

தமிழ் மணம்

‘மறையோர் வருவாரோ? மந்திரங்கள் சொல்லி
முறையால் சடங்கெல்லாம் முற்ற முடிப்பாரோ?

வேண்டும் திருமணத்தில் வேள்வி நெருப்புண்டோ?
ஆண்டு நிகழும் அருவினைகள் சொல்க’ எனச்,

சேயிழையே! நம்மணத்தில் செந்தமிழே பாட்டிசைக்கும்
காயெதற்கு நல்ல கனியிருக்க? நீயிருக்க

நானும் அருகிருக்க நம்அண்ணல் முன்னிலையில்
தேனும் சுவைப்பாலும் சேர்ந்ததுபோல் வாழ்த்தொலிக்க

*நண்பன் அழகப்பன் நம்மைப் படம்பிடிக்கப்
பண்பால் மணமாலை பாவையுனைச் சூட்டிடுவேன்


*அழகப்பன் - புதுக்கோட்டை அழகப்பா நிழற்பட நிலைய உரிமையாளர். கவிஞரின் நண்பர்.