பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 77

வேற்று மணமுறைகள் வேண்டேன் நமதுதமிழ்
ஏற்ற செயலொன்றே ஏற்பேன் எனமொழிந்தேன்;

‘ஆழச் சுனையகத்தே ஆருயிரைக் காத்தமையால்
வேழத் திறலுடையீர்! வென்றுகொண்டீர் என்னுளத்தை;

அன்றே உமக்காக ஆக்கிவிட்டேன் மெய்யுயிரை;
நன்றே மணம்பெறுவோம் நாயகரே!’ என்றுரைத்தாள்;

ஒன்றானோம்

ஓங்கு மலைக்குறிஞ்சி உண்டாக்கும் ஆறுவந்து
தேங்கி மருதத்தைச் சீராக்கிக் காட்டுதல்போல்

நற்குறிஞ்சி ஈன்றெடுத்த நங்காய் எனைக்கூடி
வற்புடைய வாழ்வை வளமாக்கி வீறளித்தாய்!

நன்செய் மருதநிலம் நம்குறிஞ்சிப் பார்வையின்றேல்
புன்செய் நிலமுமிலாப் புல்லென்ற பாலைநிலம்;

அவ்வண்ணம் நீயின்றேல் அன்பனென் வாழ்வெல்லாம்
பொய்வண்ண வாழ்வாகி வன்பாலை போலாகும்

என்றேன்; அவள்மறித்(து) ‘அவ்வா றுரையாதீர்
ஒன்றானோம் நாமினிமேல் உற்றதுணை நீரானீர்

திங்கள் முடிசூடித் தேனருவி ஆர்க்கின்ற
எங்கள் குறிஞ்சி எழில்காண்போம்’ என்றுரைத்தாள்;

அச்சமில்லை

கொல்லும் விலங்கெல்லாம் கூடித் திரிவதனால்
மெல்லியல்நீ அஞ்சுவையே என்னலும்அம் மேன்மகள்தான்

‘யானை புலிகரடி யாழிசைத்தால் தாழ்ந்துநிற்கும்
*ஏனல் வனங்காப்பேன் ஏதச்சம்? என்றுரைத்தாள்;


*ஏனல்வனம் - தினைப்புனம்