78 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
பாடினாள் பாடு குறமகளே! பண்ணொன்று பாடென்றேன் ஓடும் *மறிபோல ஓடியொரு யாழ்கொணர்ந்தாள்; மெல்விரலால் யாழ்நரம்பை மீட்டிக் குறிஞ்சிப்பண் நல்லிசையால் பாடினாள் நான்கேட்டு மெய்ம்மறந்தேன்; நாட்டை நினைத்தேன் தேன்பிழியாய்த் தித்திக்கும் தென்னாட்டின் பண்ணெல்லாம் ஏன்மறந்தார் இந்நாட்டார்? ஏதேதோ பாடுகின்றார்! பண்மறந்து போனாலும் பாட்டுப் பொருள்விளங்கத் தண்டமிழிற் பாடத் தயங்குவதேன்? என்றயர்ந்தேன்; பாட்டை நிறுத்திப் பசுங்கிள்ளைச் சொல்லாலே ‘நாட்டம் இலைபோலும் நான்பாடும் பாட்டி’லென; நாட்டை நினைந்தேன் நலங்கெட்டுப் போனவர்தம் கேட்டை நினைந்தேன் கிளிமொழியே! வேறில்லை தேனும் தினையும் என்றவுடன் என்னருகில் ஏந்திழையாள் வந்திருந்து குன்றின் குறிஞ்சிக் கிளைவிளைத்த செந்தேனும் கொல்லைப் புனத்துக் கொழுந்தினையின் மென்மாவும் வள்ளிக் கிழங்கும் வகையாகத் தான்படைத்தாள் சோலைக் காட்சி அந்தச் சுவையை அருந்தியபின் ஆங்கிருந்த சந்தனச் சோலைக்குள் சார்ந்தோம்; ஒருமரத்தில்
*மறி - மான்குட்டி |